“தனியாக என்னை காரில் அழைத்துச் சென்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்” என்று, சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

தமிழ் சினிமாவில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “சுந்தரா டிராவல்ஸ்” படத்தில் நடிகர் முரளி, வைகைப் புயல் வடிவேலு ஆகியோர் இணைந்து பட்டையைக் கிளப்பியிருப்பார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவருக்குப் பட வாய்ப்புகள் அமையாததால், அடுத்தடுத்து அவரைப் படங்களில் பார்க்க முடியவில்லை. பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், இவரது பெயர் அடிக்கடி செய்திகளில் தொடர்ச்சியாக அடிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

அதாவது, நடிகை ராதாவுக்கு ஏற்கனவே தயாரிப்பாளருடன் திருமணமாகி குழந்தை உள்ளது. தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான கணவரை விவகாரத்து செய்து விட்டு நடிகை ராதா, தனியாக வாழ்த்து வந்தார். அப்படியான நிலையில், காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவரைக் காதலித்து அவர் 2 வதாக திருமணம் செய்து கொண்டார்.

கணவர் வசந்தராஜா, சென்னை எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், நடிகை ராதாவை திருமணம் செய்து கொண்டு சென்னை சாலிகிராமத்தில் ஒன்றாக வாழ்த்து வந்தனர்.

இப்படியான நிலையில் தான், “கணவன் வசந்தராஜா என்னை அடித்து துன்புறுத்துவதாக” விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகை ராதா பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், “எனது நடத்தையில் சந்தேகப்பட்டு என் கணவன் என்னை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துவதாகவும், ஐதராபாத்தில் இருந்து வந்த என் தாயையும் அவர் அடிக்க முயற்சி செய்ததாகவும்” அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டி இருந்தார். 

இந்த புகாரின் பேரில் போலீஸ் எஸ்.ஐ வசந்தராஜாவிடம் விருகம்பாக்கம் போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் தான், “எனக்குக் கொலை மிரட்டல் விடுத்த என் கணவன் வசந்தராஜாவுக்கு ஆதரவாகச் செயல்படும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, போலீஸ் இணை கமிஷனரிடம் நடிகை ராதா, பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

சென்னை பரங்கிமலையில் உள்ள இணை கமிஷனர் நரேந்திரன் நாயரை சந்தித்து நடிகை ராதா புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில், “கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி, எனது கணவரும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டருமான வசந்தராஜா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தேன் என்றும், இந்த புகார் மீது விசாரிக்க போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாரதி, என்னை செல்போனில் அழைத்து, “காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்றும், அதனால், நீங்கள் என்னுடன் காரில் வாங்க” என்று என்னை அழைத்துச் சென்றார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

“அப்படி, காரில் அவருடன் செல்லும்போது, எனது கணவரையும் அழைத்து வந்து, என்னை சமாதனமாக போக சொன்னார் என்றும், நான் அளித்த புகாரை திரும்பப் பெற்று நல்லபடியாக வாழுங்கள்” என்று, அந்த சப் இன்ஸ்பெக்டர் பாரதி என்னை வற்புறுத்தினார்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

அத்துடன், “அப்படி இல்லை என்றால், வசந்தராஜா மீது எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என என்னை எழுதிக் கொடுக்கச் சொன்னார் என்றும், அப்போது, என் கணவரும் நல்லபடியாகச் சேர்ந்து வாழ்வதாக எழுதிக் கொடுத்தார் என்றும், இதன் தொடர்ச்சியாகவே வசந்தராஜா எனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, “போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பாரதி, இளம் பருதி ஆகியோர் எனது ஆட்கள் தான் என்றும், நீ என்ன புகார் கொடுத்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும், போலீசில் எழுதித் தந்ததை எல்லாம் அழித்துவிட்டேன்” என்றும், என் கணவர் என்னிடம் கூறியதாகவும், அதில் குறிப்பிட்டு உள்ளார்.

“இதனால், வசந்தராஜாவுக்கு ஆதரவாகவும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் இளம் பருதி, பாரதி ஆகியோர் மீதும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த வசந்தராஜா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன்” என்றும், நடிகை ராதா அந்த புகார் மனுவில் வலியுறுத்தி உள்ளார். இதனால், சினிமா உலகில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.