உதவி கேட்டுச் சென்ற இளம் பெண்ணை, காவல் உதவி ஆய்வாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் கெரில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம் பெண் ஒருவர், திருமணம் ஆன நிலையில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

இந்த தம்பதிகளுக்குத் திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகும் நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்துகொண்டே இருந்திருக்கிறது. இப்படி, நாளுக்கு நாள் தம்பதிக்கிடையே கருத்து வேறுபாட்டுக் காரணமாக, அடிக்கடி சண்டை ஏற்பட்டுக்கொண்டே வருவதால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண், தனது கணவனை விவகாரத்து செய்ய வேண்டும் என்று முடிவுக்கு வந்து உள்ளார்.

கணவனை விவாகரத்து செய்ய முடிவு செய்ததும், அடுத்து என்ன செய்வது என்று எதுவும் யோசிக்காமல் அங்குள்ள கெரில் காவல் நிலையத்திற்குச் சென்று, தனது கணவன் மீது புகார் அளித்து உள்ளார். 

அப்போது, அந்த காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் பாரத் சிங் இருந்து உள்ளார். அதன் படி, இந்த பெண்ணின் புகாரை வழக்காகப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு உதவுவதாகக் கூறி அந்த பெண்ணை அடிக்கடி காவல் நிலையத்திற்கு அழைத்து உள்ளார் காவல் உதவி ஆய்வாளர் பாரத் சிங். இதனை நம்பி, அந்த பெண்ணும் அடிக்கடி காவல் நிலையத்திற்குச் சென்று வந்திருக்கிறார். 

இப்படியான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் பாரத் சிங், காவல் நிலையத்தில் வைத்தே அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

அதன் பிறகு, பாதிக்கப்பட்ட அந்த பெண், காவல் உதவி ஆய்வாளர் மீது பாலியல் புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில், “கடந்த மார்ச் 2, 3, 4 ஆகிய தேதிகளில் காவல் உதவி ஆய்வாளர் பாரத் சிங், தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக” பாதிக்கப்பட்ட அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், ஜெய்ப்பூர் மண்டல காவல் துறைத் தலைவர் ஐஜி ஹவா சிங் குமாரியா, அல்வார் காவல் கண்காணிப்பாளர் தேஜஸ்வினிகவுதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், காவல் உதவி ஆய்வாளர் பாரத் சிங், தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, காவல் உதவி ஆய்வாளராக இருந்த பாரத் சிங், அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் தற்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.