மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு கொடுக்க வந்த பெண்ணை அரசு ஊழியர் ஒருவர் உல்லாசத்துக்கு அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்திற்காக, புகைப்படம் எடுக்கச் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

Government employee asking sexual favours jailed

அப்போது, அங்கு பணியாற்றும் தபால் பிரிவு இளநிலை உதவியாளர் 38 வயதான சந்திரன், அந்த பெண்ணிடம் உதவி செய்வதுபோல் பேசி உள்ளார்.

இதனையடுத்து, சாதிச்சான்றிதழ் பெற உதவி செய்வதாகக் கூறி, 2 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பின்னர் மறுநாள் அந்த பெண்ணை மீண்டும் வர சொல்லி அனுப்பி உள்ளார்.

அதன்படி, மறுநாள் காலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அந்த பெண் வந்துள்ளார். அப்போது, “குறிப்பிட்ட அரசு வேலையை முடிக்க வேண்டும் என்றால், என்னுடன் ஏற்காட்டிற்கு வந்து உல்லாசமாக இருக்க வேண்டும்” என்று சந்திரன் அழைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அரசு ஊழியரின் தவறான செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். 

இதனால், அதிர்ச்சியும் கோபமும் அடைந்த மாவட்ட ஆட்சியர், சந்திரன் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணை தற்போது முடிந்தது.

இந்நிலையில், தபால் பிரிவு இளநிலை உதவியாளர் சந்திரனை, சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதனிடையே, முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில், அதுவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண்ணை, அரசு ஊழியர் ஒருவர் பாலியல் இன்பத்திற்கு அழைத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.