தமிழகத்தில் தொடர்ந்து 10 வது நாளாக கொரோனா வைரஸ் மீண்டும் தலை தூக்கத் துவங்கி உள்ளதால், நேற்று 759 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது. இது, 3 வது அலையா? என்று கேட்கும் அளவுக்கு கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த 10 நாட்களாகவே புதிதாக கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் மட்டுமே முதலில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், தற்போது கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூரிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்பட்டு வருகிறது. 

இதில், தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் குறைவாகச் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை இருந்து வந்த நிலையில். தற்போது 4 ஆயிரத்து 870 ஆக தற்போது அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சில அதிர்ச்சி தகவல்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

அதன் படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 87 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், இவர்களில் 449 ஆண்கள், 310 பெண்கள் என மொத்தம் 759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், அதிகபட்சமாக சென்னையில் 294 பேருக்கும், செங்கல்பட்டில் 63 பேருக்கும், கோவையில் 58 பேருக்கும், குறைந்தபட்சமாகத் தர்மபுரி, ராணிப்பேட்டை, தென்காசி, ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகவும் தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிய வந்திருக்கிறது.

இந்த பட்டியலின் படி, தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 35 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 180 முதியவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இது வரை ஒரு கோடியே 79 லட்சத்து 66 ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதில், 8 லட்சத்து 59 ஆயிரத்து 726 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

இவற்றில், 5 லட்சத்து 19 ஆயிரத்து 393 ஆண்களும், 3 லட்சத்து 40 ஆயிரத்து 298 பெண்களும், 3 ஆம் பாலினத்தவர்கள் 35 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 31 ஆயிரத்து 569 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 162 முதியவர்களும் இடம் பெற்று உள்ளனர் என்றும், தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும், இதில் சென்னையில் ஒருவரும், செங்கல்பட்டில் 3 பேரும் உயிரிழந்து உள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ்க்கு இது வரையில் 12,547 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 547 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இது வரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 42 ஆயிரத்து 309 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். 

மிக முக்கியமாக, தற்போது தமிழகத்தில் 4 ஆயிரத்து 870 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல், மராட்டியத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

அத்துடன், கொரோனா பரவல் அதிகரிப்பால் கர்நாடக மாநிலம் தவித்து வரும் நிலையில், “லாக்டவுன் வேண்டுமென்றால் முழு ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று, பொது மக்களுக்கு கர்நாடக முதலமைச்சர் கூறியிருக்கிறார்.