கடந்த அக்டோபர் 13 -ம் தேதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவல் வெளிவந்ததை அடுத்து, முதல்வரை நேரில் சென்று துக்கம் விசாரிக்க, 72 வயது மதிக்கத்தக்க தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சென்னையிலிருந்து சேலம் கிளம்பிச் சென்றார். அப்படி அவர் செல்லும்போது, கார் திண்டிவனம் அருகே சென்றபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் இருந்த அவர், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூச்சுத்திணறலுக்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆனால், பின்வந்த நாள்களில், அமைச்சருக்கு தொற்று உறுதியானது.

அதையடுத்து, அமைச்சரின் உடல்நலம் குறித்து அறிய, அக்டோபர் 20 ம் தேதி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார். அங்கே அமைச்சர் துரைக்கண்ணுவிடம் காணொலி காட்சி வழியாக பேசி, நலம் விசாரித்திருந்தார். மேலும் அவரது உடல் நிலை குறித்து காவிரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் டாக்டர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்ததாக சொல்லப்பட்டது. மேலும் துரைக்கண்ணு குடும்பத்தாரையும் சந்தித்து எடப்பாடி பழனிசாமி அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் முடிவில், அமைச்சரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் தெரிந்தது. ஆனால் எதிர்பாராவிதமாக இன்று (அக்டோபர் 25), காலை 4 மணி முதல் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. மேலும், அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அமைச்சருக்கு ஏற்கெனவே உடல்சார்ந்த சில சிக்கல்கள் இருப்பதால், தற்போது அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரச்னைகளுக்கிடையில், அமைச்சருக்கு முழு முயற்சியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக, மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரின் உடல்நலம் குறித்த தகவலை அறிந்தவுடன், இன்று அவர் சிகிச்சைப் பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு, மீண்டுமொருமுறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவ குழுவினருடன் கேட்டறிந்திருக்கிறார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் முதல்வருடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர்.

இதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் நலமடைந்து மீண்டும் மக்கள் பணிக்கு திரும்பியுள்ள நிலையில் விரைவில் அமைச்சர் துரைக்கண்ணும் நலமடைந்து பணிக்கு திரும்புவார் என தொண்டர்களும், மக்களும் நம்பிக்கையோடு இருக்கின்றனர்!

விரைவில், மருத்துவமனை சார்பில் அமைச்சரின் உடல்நிலை குறித்து நல்ல அப்டேட் வரும்  என நாமும் எதிர்ப்பார்ப்போம்!