தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. திரைக்கு பின்னாலும் ஹீரோவாக திகழும் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் சூர்யா படங்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 23 ஆண்டுகள் தன் நடிப்பின் மூலம் ஆறிலிருந்து அறுவது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்ற ஆதர்ஷ நாயகன்.

சூர்யா கைவசம் சூரரைப் போற்று திரைப்படம் உள்ளது. 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படமாகும். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். 

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தில் மீதம் இருக்கும் மூன்று பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது. 

இந்நிலையில் சூர்யா 40 திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள். விரைவில் படத்தின் மற்ற நடிகர்கள், இசையமைப்பாளர்கள் குறித்த தகவல் வெளியாகும். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் வைத்து நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தை இயக்கியிருந்தார் பாண்டிராஜ். ஏற்கனவே சூர்யாவை பசங்க 2 படத்தில் இயக்கியிருப்பார். சூர்யாவுடன் இரண்டாவது முறையாக இணையும் இயக்குனர் பாண்டிராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். 

சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளில் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாடிவாசல் என்ற நாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது.