தருமபுரியில் 12 ஆம் வகுப்பு மாணவியை கடத்தியதால், 21 வயது காதலனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர். 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அந்த பகுதியிலுள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி தன் வீட்டில் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த சிறுமி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த நிலையில், திடீரென்று மாயமாகி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், பல இடங்களில் தேடி பார்த்து உள்ளனர். ஆனால், எங்கும் தேடியும் அந்த மாணவி கிடைக்காத நிலையில், காரிமங்கலம் காவல் நிலையத்தில், மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காரிமங்கலம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த 21 வயதான பாலமுருகன் என்ற இளைஞர், மீது சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். 

இதனையடுத்து, பாலமுருகன் தேடி அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கு அவர் இல்லாமல் வெளியூர் சென்றிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, பாலமுருகனின் பெற்றோர் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர்.
 
இந்நிலையில், காணாமல் போன பள்ளி மாணவியும், பாலமுருகனும் கோவையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவைக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த மாணவியையும், பாலமுருகனையும் மடக்கிப் பிடித்தனர். 

அதன் பின்னர், பள்ளி மாணவியை மீட்ட போலீசார், மாணவியைக் கடத்தியதற்காகப் பாலமுருகனை கைது செய்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அந்த இளைஞரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், வில்லியனூரில் 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு பெண்ணை அடித்து உதைத்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரைச் சேர்ந்த 38 வயதான நடராஜன், திருபுவனையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அங்குள்ள பாகூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. 

திருமணத்தின் போது விஜயலட்சுமிக்கு அவரது பெற்றோர் 100 சரவன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் சீர்வரிசையாகக் கொடுத்ததாகத் தெரிகிறது. 

இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் மிகவும் மகிழ்ச்சியாகச் சென்ற நிலையில், விஜயலட்சுமிக்கு அடிக் கடி கருச்சிதைவு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து உள்ளது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், விஜயலட்சுமியின் பெற்றோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்று பணம் வைத்து உள்ளனர். இதனை அறிந்துகொண்ட  நடராஜன் மற்றும் அவரது பெற்றோர், “உன் பெற்றோரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் வாங்கி வா” என்று, விஜயலட்சுமியை கணவன் நடராஜன் மற்றும் மாமனார் சேகர், மாமியார் செல்வி ஆகியோர் வற்புறுத்தியதோடு, துன்புறுத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், அவர் இதற்கு மறுப்பு 

தெரிவித்ததால், கணவன் - மனைவி இடையே மீண்டும் பெரிய அளவில் பிரச்சனை எழுந்து உள்ளது. இதில், கடும் ஆத்திரமடைந்த நடராஜன், மனைவி விஜயலட்சுமியை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி, வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்துவதாகப் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் கணவர், மாமனார், மாமியாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.