வேலூர் அருகே ஃபேஸ்புக் நட்பால் தன்னுடைய வாட்ஸ்ஆப் நம்பரை பகிர்ந்த இளம் பெண்ணின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து இளைஞர் ஒருவர் மிரட்டிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்த 21 வயதான சரத்குமார்,  டிராக்டர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். 

இதனிடையே, சரத்குமாருக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. 

அதே நேரத்தில், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஃபேஸ்புக் நட்பில் இளம் பெண்ணின் மனதை கவர்ந்த 21 வயதான சரத்குமார், தனது பக்கத்து ஊர்க்காரர் என்று நம்பி, சரத்குமாரிடம் தொடர்ந்து சாட்டிங்கிகல் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. அப்போது, இளைஞர் சரத்குமாரின் வசிகரமான பேச்சை நம்பிய அந்த பெண், தன்னுடைய வாட்ஸ்ஆப் நம்பரையும் பகிர்ந்து உள்ளார். இப்படியே, இவர்களது நட்பு ஃபேஸ்புக்கில் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருந்து உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, அந்த இளம் பெண் ஐதராபாத்தில் இருந்து தன்னுடைய சொந்த கிராமத்துக்கு வந்து உள்ளார். இந்த தகவல், சரத்குமாருக்கு எப்படியோ தெரிய வந்தது. இதனையடுத்து, அப்பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமான பதிவுகளைப் பதிவிட்டு, உல்லாசமாக இருக்க சரத்குமார் அழைப்பு விடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், சரத்குமாரை கடுமையாக எச்சரித்துவிட்டு, அவருடனான தொடர்பையும் நிறுத்திக் கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த சரத்குமார், அந்த இளம் பெண்ணின் போட்டோவை ஃபேஸ்புக்கிலிருந்து எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து அப்பெண்ணின் வாட்ஸ்ஆப்பி எண்ணிற்கு அனுப்பி வைத்து உள்ளார். 

மேலும், இந்த மார்ப்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை சமூக ஊடகங்களில் பகிராமல் இருக்க 2 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என்று, சரத்குமார் அந்த இளம் பெண்ணை மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால், இன்னும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்த அந்த இளம் பெண் இது குறித்து தன்னுடைய பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். 

இதனால், பதறிப்போன இளம் பெண்ணின் பெற்றோர், அங்குள்ள குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சரத்குமாரை தேடி கண்டுப்படித்து அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. 

சமூக வலைத்தளங்களில் அறிமுகம் ஆகும் நபர்களை நம்பி, யாரும் எந்த சொந்த விசயங்களையும் பகிர வேண்டாம் என்று, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அப்படி, சொந்த மற்றும் மிகவும் ரகசியமான விசயங்களைப் பகிரும் பட்சத்தில், இது போன்ற தேவையில்லாத மிரட்டலுக்கு அஞ்சி நடக்க வேண்டிய சூழல் ஏற்படுவதற்கு, இந்த சம்பவமும் உதாரணமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.