“நிவர் புயல் 3 மணி நேரமாக நகராமல் இருப்பதற்கு காரணம் என்ன?” என்று, வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்து உள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், நாளை மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 25 ஆம் தேதி மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று, வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார். 

அத்துடன், நவர் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் விளக்கம் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலசந்திரன், “இன்று காலை தான் நிவர், புயலாக மாறியதாக” குறிப்பிட்டார்.

“இதற்கு முன்பாக, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தைப் பொருத்தவரை நேற்று காலை 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது என்றும், இதனையடுத்து 14 கிலோ மீட்டர் வேகத்தில் இரவு நேரத்தில் 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது என்றும், தற்போது நிலையாக அது இருக்கிறது” என்றும், அவர் கூறினார்.

மேலும், “முதலில் கீழே இருந்தது என்றும், தற்போது மேலே நகர்ந்து வருவதால் இலங்கை பகுதியுடன் தொடர்பில் உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

“வேறு ஒரு இடத்தில் தொடர்பில் உள்ள போதுமு், புயலின் நிலையில் மாற்றம் நிகழும் போதும் நகர்வில் மாற்றம் இருக்கும் என்று குறிப்பிட்ட பாலசந்திரன், இது இயல்பான ஒன்று தான்” என்றும், அவர் கூறினார்.

அதே போல், “புயல் ஒரே வேகத்தில் நகராது என்றும், ஏற்ற இறங்கங்கள் இருக்கக் கூடும் என்றும்” அவர் விளக்கம் அளித்தார்.

அத்துடன், “முதலில் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது என்றும், இப்போது அது நிலையாக உள்ளது என்றும், இதன் பிறகு தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும், அதன் பிறகே அந்த புயல் மீண்டும் வேகமாக நகரக்கூடும்” என்றும், , வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் விளக்கம் அளித்தார்.

மேலும் “இந்த புயல் காரணமாக இன்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம்” என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. . 

அதே நேரத்தில், தமிழகத்தில் நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், நிலைமையைத் தீவிரமாகக் கண்காணிக்க, தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திர அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.

இதனையடுத்து, நிவர் புயல் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி, முன்னதாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, சில முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி தற்போது வெளியிட்டுள்ளார். 

அதன் படி, “நிவர் புயல் காரணமாகத் தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை” என்று, முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.

அத்துடன், “மழை பெய்வதைப் பொறுத்துத் தான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்” என்றும், முதல்வர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

மேலும், “சென்னை உட்பட நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்றும், செம்பரம்பாக்கம் குறித்து எந்த அச்சமும் கொள்ள வேண்டாம்” என்றும்,  வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

அதே போல், “வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்க அம்மா உணவகம் தயார் நிலையில் இருப்பதாகவும், 50 இடங்களில் அம்மா குடிநீர் மையம் தயார் நிலையில் உள்ளது” என்றும், சென்னையில் நடமாடும் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழாவில் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

இதனிடையே, “புயல் பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும்; உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளைச் செய்யவும் திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழக்கிடுவோம்” என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.