ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்துக் கடிதம் அளித்து வலியுறுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ் உட்பட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என, தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன்மீது எந்தவொரு முடிவையும் ஆளுநர் தற்போது வரை எடுக்கவில்லை. இந்நிலையில், தன் மீதான தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்தத் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுகுறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுத்து உத்தரவிட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். உரிய முடிவை ஆளுநர் எடுப்பார் என நம்புவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆளுநர் 7 பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலரும் 7 பேர் விடுதலை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து பதில் இல்லை. நேற்று முதல்வர் பழனிசாமி ஆளுநரைச் சந்திப்பதாக இருந்தது. அதில் 7 பேர் விடுதலை முக்கிய அஜண்டாவாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

எழுவர் விடுதலையில் ஆளுநரின் கால தாமதம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு சிறைவாசிகளான 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் வரையறையின்றிக் காலம் தாழ்த்தி வருவது மனித நேயமற்றதும், அதிகார அத்துமீறலான செயலாகும்.

29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். இதன் பிறகாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசும் இனியும் வாய் மூடி வேடிக்கை பார்த்திராமல் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் 7 பேர் விடுதலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் நேரில் வலியுறுத்த, இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்துக் கடிதம் அளித்தார். அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இருந்தனர்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இதனிடையே 2018, செப்டம்பர் மாதம், இதற்காக தமிழக அமைச்சரவை கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என, நாங்கள் ஆளுநரிடம் வலியுறுத்தியிருக்கிறோம். சட்டரீதியாக, மனிதாபிமானத்துடன் முடிவெடுக்க வேண்டும் என, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறோம்.
ஆளுநர் உறுதி
ஏறக்குறைய 29 ஆண்டுகள் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனியாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனை ஆளுநரிடத்தில் நாங்கள் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இது தொடர்பாக, உரிய முடிவை எடுப்பதாக எங்களுக்கு அவர் உறுதியளித்துள்ளார். காலதாமதம் குறித்துக் கேட்டபோது, அதிலுள்ள சட்டரீதியான பார்வையை விளக்கினார்.
தருமபுரி பேருந்து எரிப்புச் சம்பவத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதனை ஆளுநரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.