மதுரையில் சுவர் விளம்பரத்தால் அதிமுக - பாஜகவினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பாசன கால்வாய் பாலத்தில் உள்ள தடுப்பு சுவர் விளம்பரத்தால் தான், அதிமுக - பாஜகவினர் கருத்து மோதலால் மோதிக்கொண்டு உள்ளனர்.

அதாவது, கடந்த மாதம் 28 ஆம் தேதி மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற ஒரு விழாவிற்காக வரவேற்பு தெரிவித்து, குறிப்பிட்ட அந்த சுவரில், சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.

ஆனால், தற்போது பாஜக தமிழ் மாநில தலைவர் முருகன் தலைமையில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு வரவேற்பு தெரிவித்து, குறிப்பிட்ட அந்த சுவரில் விளம்பரம் செய்வதற்காக, அதிமுகவினர் வரைந்திருந்த சுவர் விளம்பரத்தை பாஜகவினர் அழித்து உள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அதிமுக நகர செயலாளர் பாஸ்கரன் தலைமையில் வந்த அதிமுகவினர், அங்கு விளம்பரம் செய்துகொண்டு இருந்த பாஜக வினரிடம், ஏற்கனவே இங்கு இருந்த சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால், அவர்கள் இரு தருப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால், இரு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், தங்களது சக கட்சித் தொண்டர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து, அங்கு வர வைத்தனர். 

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட அந்த இடத்தில் இரு கட்சியினரும் அதிக அளவில் அங்கு குவிந்ததால், வாக்குவாதம் மேலும் முற்றிக்கொண்டது. அதிக அளவிலான கட்சித் தொண்டர்கள் அங்கு காரிலும், இருசக்கர வாகனத்திலும் வந்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவான நிலையில், அங்கு வந்து பார்த்து நிலைமையை உணர்ந்துகொண்ட அப்பகுதி காவல் துறையினர், இருதரப்பினர் இடையே சுமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரிய அளவிலான பிரச்சனை ஏற்படாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேல் யாத்திரையைத் தொடங்கி நடத்தி வருகிறது. ஆனால், இதற்குத் தடை போட்ட அதிமுக தலைமையிலான தமிழக அரசு, யாத்திரையில் கலந்துகொண்ட பாஜக தமிழ் மாநில தலைவர் முருகனை தொடக்கத்தில் கைது செய்து, அதன் பிறகு விடுவித்தது. இதனால், இரு கட்சிக்குள்ளும் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே பாஜக தமிழ் மாநில தலைவர் முருகன் உட்பட, பாஜகவை சேர்ந்த சிலர் ஆளும் அதிமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மதுரையில் சுவர் விளம்பரத்தால் வைப்பதில், அதிமுக - பாஜகவினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ள சம்பவம், மதுரை மக்களிடம் மட்டுமல்லாது இரு கட்சிகளின் உறுப்பினர்களிடையே, பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.