ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி இணையதளங்களில் பாடலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 'ரிலீஸ் பேர‌றிவாளன்' என்ற ஹேஸ்டேக்குடன் வந்த அந்தப் பாடலை இணையதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவை பகிர்ந்திருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், ‘சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி’ என்று ட்விட் செய்துள்ளார். இவரை போலவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் பார்த்திபன், நடிகர் விஜய் ஆண்டனி உள்பட பலர் ஏற்கனவே இது குறித்து தங்களது சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து தனிப்பட்ட முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் 

திரையுலக பிரபலங்கள், பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சமூகவலைதளங்களில் இதுவரை கூறிய கருத்துகளின் தொகுப்பு :

விஜய் சேதுபதி 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழக ஆளுநர் அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும். அற்புதம்மாள் அவர்களின் 29 வருட போராட்டம், ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுக்க வேண்டும். தயவுசெய்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை சீக்கிரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’

கார்த்திக் சுப்புராஜ்

ஒரு குற்றமும் செய்யாத ஒரு மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை. தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம்... பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பார்த்திபன்

அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது.விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன

விஜய் ஆண்டனி

நிரபராதியான சகோதிரர் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல

பிரகாஷ்ராஜ்

தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக  நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்ப வேண்டியிருக்கிறது.

முன்னராக, திமுக விசிக போன்ற கட்சி சாந்த ஆதரவுகள் இருந்து வந்த நிலையில், தற்போது பேரறிவாளன் விடுதலைக்கு திரையுலக ஆதரவுகளும் குவிந்து வருகின்றன. சமூகவலைதளங்களிலும், இந்த விவகாரம் மீண்டுமொரு பெரிதாகியுள்ளது. ஆளுநர் இனியாவது இதுகுறித்து விரைந்து பதிலளிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு, காண்போர் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது!