14 வயது சிறுமியை கடத்தி 2 நாட்களாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த கொடுமை அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் சாகேரி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். தற்போது, கொரோனா விடுமுறையால் தனது வீட்டில் அந்த சிறுமி இருந்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத 2 நபர்கள் அந்த சிறுமியை கடத்திச் சென்று உள்ளனர். இதனையடுத்து, அந்த சிறுமியை தொடர்ந்து 2 நாட்களாக பாலியல் வன்புணர்வு செய்து உள்ளனர்.

இதனால், சிறுமியை வெகு நேரமாக காணவில்லை என்று, பதறிப்போன சிறுமியின் பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடத்திச் செல்லப்பட்ட சிறுமி, கடத்தல் காரர்கள் பிடியிலிருந்து எப்படியோ தப்பித்து தனது வீட்டிற்கு வந்து உள்ளார்.

வீட்டில் வந்து தனது பெற்றோரைப் பார்த்த அந்த சிறுமி, “என்னை 2 பேர் சேர்ந்து கடத்திச் சென்று விட்டு, கடந்த 2 நாட்களாக வெவ்வேறு இடங்களில் வைத்து என்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக” கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து அங்குள்ள காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியிடம் என்ன நடந்தது என்று விசாரணை நடத்தினர். 

அப்போது, “தனக்கு 2 நாட்களாக என்ன நடந்தது என்பதை முழுவதுமாக கூறி, தன்னை கடத்திச் சென்றவர்கள் பற்றிய விபரங்களையும் சிறுமி கூறி உள்ளார். இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியைக் கடத்திச் சென்ற ராகுல் சோன்கர், மிதுன் சோன்கர் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அத்துடன், இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி அங்குள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இது 
போன்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்குகள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது அந்த மாநில மக்களிடையே, கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்த சம்பவமும், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், பெங்களூரு அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். “அந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன?” என்று, அப்பகுதி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.