டெல்லியில் இருந்து, காணொலி வாயிலாக ஆந்திர மாநிலத்திற்கான சாலை மேம்பாட்டுத்திட்டங்களை அமைச்சர் நிதின் கட்காரி இன்று தொடக்கி வைத்தார்.

அதன் பின் மக்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது" என்று கூறினார். பின்னர், தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளாலேயே இந்த நிலை எட்டப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் தமிழகத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் கூறினார்.

பின், கடந்த ஆறு ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2667 கி.மீ (64%) அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் ரூ.15,592 கோடி மதிப்பிலான 1411 கி.மீ நீள தொலைவிலான 16 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சருமான நிதின் கட்கரி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வுக்கு முதல்வர் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தலைமை தாங்கினார். மத்திய இணை அமைச்சர்கள் வி.கே.சிங்., ஜி.கிஷன் ரெட்டி, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய நிதின்கட்கரி, 2014-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பு ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம்4193 கி.மீ ஆக இருந்தது என்றும், இப்போது 6860 கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். கடந்த ஆறு ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2667 கி.மீ (64%) அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். ரூ.34,100 கோடி மதிப்பிலான டிபிஆர் நிலையின் கீழ் நடைபெறும் பணிகள் 2024-ம் ஆண்டுக்குள் முடிவடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

ரூ.25,440 கோடி மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் கூறினார். ரூ.18,110 கோடி திட்டங்களில் 50-60 % முன்னேற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். நிலுவையில் உள்ள பணிகள் குறித்து விவாதித்து தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் டெல்லி வரவேண்டும் என்றும் மத்திய அமைச்சர் திரு.நிதின்கட்கரி அழைப்பு விடுத்தார். ஆந்திரமாநிலத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் நிதின் கட்கரி உறுதி அளித்தார்.

மிக முக்கியமாக, ``தமிழகத்தில் பெருமளவு சாலைவிபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் சிறந்த முயற்சியால் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார் அவர்.