“என்னை தமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனையாக இருக்கிறது” என்று முத்தையா முரளிதரன் கவலைத் தெரிவித்து உள்ளார். 

இலங்கை தமிழரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு கதையானது, “800” என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இலங்கை தமிழராகவே இருந்தாலும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரின் போது, “தமிழன் என்பதை மறந்து, அவர் சிங்களர்கள் பக்கம் நின்று, அதை நியாயப்படுத்திப் பேசவும் செயல்படவும் செய்ததாக” கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

மேலும், “தன் சுயநலம் சார்ந்து தன்னுடைய விளையாட்டு வாழ்க்கைக்காக, சுயநலமாக யோசித்து தமிழர்களுக்கு எதிராகவும் இலங்கை ராணுவம் நடத்திய ஈழ தமிழ் அழிப்பு இனப்படுகொலையை ஆதரித்தும் பேசியும், தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகம் செய்து, தமிழ் இனத்தில் துரோகியாகி விட்டார்” என்றெல்லாம் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அவரை விமர்சித்ததுடன், அந்த படத்தில் இருந்து விலகும் படி, நடிகர் விஜய் சேதுபதியை இயக்குநர் பாரதிராஜா, சேரன் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் இயக்கங்கள் பலவும் “800” படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்குப் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

அத்துடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் தாமரை, நடிகர் விவேக் உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்களும், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் விஜய் சேதுபதியை படத்தில் நடிக்க வேண்டாம் என்றும், வலியுறுத்தினர்.

ஆனால், “ இது அரசியல் சார்ந்த படம் இல்லை என்றும், முத்தையா முரளிதரனின் விளையாட்டு சார்ந்த படம்” என்றும், இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு குழு விளக்கம் அளித்தது. ஆனால், இது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்பட வில்லை.

அதன் தொடர்ச்சியாக, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, நடிகர் விஜய்சேதுபதிக்கு அட்வைஸ் ஒன்றை வழங்கி உள்ளார்.

அதில், “ '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து புரிந்து செயல்பட்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது” என்று, வலியுறுத்தி உள்ளார்.

“நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும், உணர்வைப் புரிந்து செயல்பட்டால் விஜய் சேதுபதி எதிர்காலத்திற்கு அது நல்லது” என்றும், அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில், முத்தையா முரளிதரன் தன் தரப்பு விளக்கத்தை அளித்து உள்ளார்.

அதில், “என்னைத் தமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனையாக இருக்கிறது” என்று, முத்தையா முரளிதரன் கவலைத் தெரிவித்து உள்ளார். 

“பள்ளிக்காலம் முதலே தமிழ் வழியில் படித்துவந்தவன், எனக்குத் தமிழே தெரியாது என்பது தவறான செய்தி. இலங்கைத் தமிழரானது எனது தவறா?” என்றும்,  முத்தையா முரளிதரன் கேள்வி எழுப்பி உள்ளார். 

“விளையாட்டிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் இது வரை பல சர்ச்சைகளைக் கடந்தே வந்துள்ளேன் என்றும், தற்போது வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 படத்தைப் பற்றி பல்வேறு சர்ச்சை விவாதங்கள் எழுந்துள்ளது கவலையாக இருப்பதாகவும்”  முத்தையா முரளிதரன் குறிப்பிட்டு உள்ளார்.

“7 வயது முதல் போர் நிறைந்த சூழலில் இருந்த நான், எப்படி கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சாதித்தேன் என்பது குறித்த படம் தான் “800” என்றும், முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்து உள்ளார். 

“சிலர் அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்திற்காகவும், என்னைத் தமிழினத்திற்கு எதிரானவர் என்பது போல சித்தரிப்பது வேதனையளிக்கிறது” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

“எவ்வளவு விளக்கம் அளித்தாலும் எதிர்ப்பாளர்களைச் சமாதானப்படுத்த முடியாது என்றும், சுனாமி காலங்களில் ஈழ மக்களுக்கு நான் உதவியது அந்த மக்கள் அறிவார்கள்” என்றும், முத்தையா முரளிதரன் சுட்டிக்காட்டி உள்ளார்.