இந்தியாவில், கடந்த 24 மணி நேர இடைவெளியில் பதிவாகாத அளவிலான அதிக பாதிப்பு, நேற்று பதிவாகியிருந்தது. ஆம், நேற்றைய தினம் மட்டும் ஒரே நாளில் 30,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றியிருந்தது. இந்த எண்ணிக்கை உயர்வு, ஒரு மில்லியன் என்ற உச்ச எண்ணிக்கையை இந்தியா அடைவதற்கான காரணமாக இருந்தது.

இதேபோல, கிருமித்தொற்றால் பலியானோர் எண்ணிக்கையானது நேற்று ஒரே நாளில் 600 -க்கும் மேல் பதிவாகியிருந்தது. இதனால், மொத்த உயிரிழப்பு 25,000 என்ற எண்ணிக்கையைக் கடந்தது. மொத்தத்தில் நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்ந்ததை போல, இந்தியாவில் இறப்பும் அதிகமாகியுள்ளது. 

உலகம் முழுவதும்கூட, இதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் 1.39 கோடி பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதில், இந்தியாவில் மட்டும் ஒரு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், வங்கதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கின்றது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,96,323 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,496 என்று உள்ளது.

இந்தியாவைப் போலவே தான் வங்கதேசமும் நோயாளிகள் உயர்வில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதைத்தொடர்ந்து, அங்கும் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், வங்க தேசத்தின் தலைநகரான டாக்கா பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல தனியார் மருத்துவமனை கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாகச் சோதனை செய்வதாகக் கூறி அம்மாநில அரசின் அனுமதியைப் பெற்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. அங்கு கொரோனா சோதனையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சிலரிடம் மட்டுமே சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, பல ஆயிரக்கணக்கானவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சோதனையே செய்யாமல் போலியாக கொரோனா நெகட்டிவ் எனச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, சில தினங்களுக்கு முன் அந்நாட்டுச் சுகாதாரத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து அங்குச் சென்று அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், அந்த மருத்துவமனையின் இரண்டு கிளைகளில் மட்டும் இதுவரை சுமார் 10,000-க்கும் அதிகமானவர்களுக்குச் சோதனை முடித்து சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் 4,000 பேருக்கு முறையான சோதனையும் 6,000-க்கும் அதிகமானவர்களுக்குப் பரிசோதனையே இல்லாமல் போலி நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த, சுகாதாரத்துறையினர், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவர் மற்றும் நிர்வாகி முகமது ஷகீத்தை கைது செய்யும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. ஆனால், அதற்குள் அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளார். 9 நாள்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வங்கதேசம் - இந்தியா எல்லையில் உள்ள ஒரு ஆற்றின் அருகேயிருக்கும் கிராமத்தில் மறைந்திருந்ததைக் கண்டடைந்த போலீஸார், அவர்களில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். அவர் புர்கா அணிந்தபடி, ஆற்றைக் கடந்து இந்தியாவுக்குத் தப்பி ஓட முயன்றபோது இந்தக் கைது சம்பவம் அதிரடியாக நடந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனையின் பிற ஊழியர்கள், நிர்வாகிகள், மருத்துவர்களையெல்லாம் காவல்துறையினர் தொடர்ச்சியாகக் கைது செய்துள்ளனர்.

இவர் மட்டுமல்லாது வங்கதேசம் முழுவதும், பல இடங்களிலும் இப்படியான போலி சோதனைகளின் அடிப்படையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்படுவது, அரசின் பார்வைக்கு தற்போது வந்துள்ளது. இப்படியான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு, அனைவரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் வங்கதேசத்தின் கொரோனா பற்றிய உண்மைத்தன்மை மொத்தமாகக் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரம், அந்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

வருங்காலத்தில் முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்போது, அப்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உயரும் எனக் கூறி மருத்துவ வல்லுநர்கள் அஞ்சி வருகிறார்கள். இனி வரும் நாள்கள், வங்கதேசத்துக்கு, போர்க் காலமாகவே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்குமெனப் பொறுத்திருந்து பார்ப்போம்!

- பெ. மதலை ஆரோன்