புதுச்சேரி மாநிலத்தில் விஜயகுமார் என்ற நபர் அண்மையில் ஆன்லைன் ரம்மி விலையாட்டில் 40 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்ததுடன், தற்கொலையும் செய்துகொண்டார். இந்தநிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.

தற்போதைய ஸ்மார்ட்போன் வாழ்க்கையில், ஏராளமான இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமைகளாக இருந்துவருகின்றனர். குறிப்பாக, பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு இந்திய அளவில் ஏராளமான இளைஞர்கள் அடிமைகளாக இருந்துவந்தனர். ஆனால், சமீபத்தில் இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. 

அதேபோல ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கும் பலரும் அடிமையாக இருந்துவருகின்றனர். இளைஞர்கள் மட்டுமில்லாமல் திருமணமானவர்களும் இந்த விளையாட்டுக்கு அடிமையாக இருக்கின்றனர். இந்த விளையாட்டினால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்யும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்றன. அதனால், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துவந்தன.

நாடு முழுவதும் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. இலவச விளையாட்டுகள் தற்போது கட்டணமாகவும், பணம் வைத்து விளையாடும் சூதாட்டமாகவும் மாறி விட்டது. ஆன்லைனில் ரம்மி எனப்படும் சீட்டாட்ட மோகம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த விளையாட்டினால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. கடன் வாங்கி பணம் கட்டி விளையாடிய பலரும் பணத்தை இழந்து, கடனாளியாகி உள்ளனர்.

வில்லியனூர் கோர்க்காடு வியாபாரி ஒருவர், பல லட்சத்துக்கு மேல் இழந்து கடனாளியானார். விரக்தியடைந்த அவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். 'ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்' என அவர் இறக்கும் முன்பு பேசிய ஆடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று (அக். 21) கூறியதாவது:

"புளூவேல் (Bluewhale) என்ற உயிரை பறிக்கும் விளையாட்டை தடை செய்ய புதுவை அரசுதான் முதலில் வலியுறுத்தியது. அதன்படி, அந்த விளையாட்டு தடை செய்யப்பட்டது.

ஏற்கெனவே புதுவையில் ஆன்லைன் லாட்டரியை புதுவையில் தடை செய்துள்ளோம். ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் பலரும் பணத்தை இழந்து வருகின்றனர். புதுவையில் ஒருவர் ரூ.40 லட்சம் ரூபாய் வரை ரம்மி விளையாட்டால் இழந்து, உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார்.

இவ்விளையாட்டு தடையானது மாநில அரசின் கீழ் வராது. அதனால், ஆன்லைன் விளையாட்டுகளை உடனடியாக மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என.மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்குக் கடிதம் எழுதியுள்ளேன். ரம்மி மட்டுமல்ல அனைத்து சூதாட்ட செயலிகளையும் தடை செய்ய வலியுறுத்தியுள்ளேன். ரம்மி விளையாட மக்களைத் தூண்டும் விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.