ஹத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து மதத்தை விட்டு 236 வால்மீகிகள் இனத்தைச் சேர்ந்த மக்கள் வெளியேறி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட 19 வயது இளம் பெண் ஒருவர், கடந்த மாதம் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். 

இதனையடுத்து, இந்த வழக்கை விரைந்து நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அம்மாநில உள்துறைச் செயலர் பக்வான் ஸ்வரூப் தலைமையில், அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்தார். அதே நேரத்தில், அந்த சிறுமியின் கிராமத்திற்குச் செல்ல ஊடகங்கள் உட்பட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்கு இன்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டு, அதன் பிறகு அனுமதிக்கப்பட்டார். 

அதன் தொடர்ச்சியாக, ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அந்த மாவட்ட போலீசாரிடம் அவர்கள் மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

“சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரில் ஒருவரை நன்றாக எங்களுக்குத் தெரியும்” என்று, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினர் போலீசாரிடம் கூறினார். அதன் தொடர்ச்சியாக, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 4 கைதிகளில் ஒரு கைதியான சந்தீப் தாகூர் என்பவர், “ஹத்ராஸ் போலீசாருக்கு கடிதம்” ஒன்றை எழுதினார். அதில், “நானும், அந்த இளம் பெண்ணும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் நேரில் சந்திப்பதுடன், போனிலும் அடிக்கடி பேசிக்கொள்வோம். எங்களது நட்பு அவர்களது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. இதனால், அவர்கள் குடும்பத்தினரே அந்த இளம் பெண் கொலை செய்திருக்கலாம்” என்ற ரீயதில் அந்த கடிதம் இருந்து.

இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது. இதில், சிபிஐ அதிகாரிகள் தற்போது 3 வது முறையாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியலின சிறுமிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த 236 பேர் இந்து மதத்தை விட்டு வெளியேறி, புத்த மதத்தைத் தழுவி உள்ளனர்.

அதாவது, “கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளதாகவும், அதிலும் கடந்த ஒரு மாதத்தில் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ், பல்ராம்பூர் ஆகிய பகுதிகளில் பட்டியலின சிறுமிகள், அங்குள்ள ஆதிக்க சமூகத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அச்சமூக மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளதாகவும்” குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

மேலும், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து உள்ளதாகவும், ஆனால் இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ஹத்ராஸ் விவகாரத்திற்குப் பிறகு பட்டியலின மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறி, புத்த மதத்தை ஏற்றுக்கொள்வதை விடுதலை உணர்வாகப் பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக, கடந்த 64 வருடங்களுக்கு முன்னதாக அண்ணல் அம்பேத்கர் 3 லட்சத்து 65 ஆயிரம் மக்களை இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்தைத் தழுவச் செய்தார். இது வரலாற்றில் ஒடுக்குதலுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மற்றொரு சகாப்தமாகப் பார்க்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், ஹத்ராஸ் இளம் பெண் பலாத்கார படுகொலை சம்பவத்திற்குப் பிறகு, அங்கு வசிக்கும் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த 236 பேர் இந்து மதத்தை விடுத்து, புத்த மதத்தைத் தழுவி உள்ளனர்.

இது தொடர்பாகப் பாதிக்கப்படும் மக்கள் கூறும்போது, “இந்துக்கள் எங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதே போல், ஹத்ராஸ் விவகாரத்திற்குப் பின் மாநில அரசும், காவல் துறையினரும் எங்களுக்கு உதவப் போவதில்லை. அதனால், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தனர். இதனால், இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 

இந்த மதம் மாறும் நிகழ்வு, அந்த மாநில அரசு, அந்த மாநில காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மீது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.