உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிகளவில் பரவியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கின போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, `இந்த நோய் ஏழைகளுக்கு வராது. பணக்காரர்களுக்கானது இந்த வியாதி' என்றார். அதேபோல, `இன்னும் மூணு நாள்கள்ல, கொரோனா நம்மை விட்டு முற்றிலுமா ஒழிஞ்சுடும்' என்றார். பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான இந்த வார்த்தைகள், பின்னாள்களில் முற்றிலுமாக பொய்த்துப்போனது.

சாமானியன் தொடங்கி, அரசியலில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள்வரை, யாரையுமே கொரோனாவின் தாக்கம் விட்டுவைக்கவில்லை. 
 
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் அடுத்தடுத்து 5 பெரிய அரசியல் தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது அரசியல் தலைவர்கள் பலர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று இந்தியாவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். லேசான அறிகுறியுடன் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குர்கானில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
அதேபோல் இன்னொரு பக்கம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாமல் ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் மாளிகையில் மொத்தம் 95க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இவரைத் தொடர்ந்து கர்நாடக மாநில பாஜக முதல்வர் எடியூரப்பா கொரோனா காரணமாக நேற்று பாதிப்படைந்தார். லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா ஏற்பட்டது. இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அதேபோல் எடியூரப்பாவின் மகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் மணிப்பால் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இவர்கள் மட்டுமின்றி உத்தரபிரதேசத்தை சேர்ந்த நீர்வள துறை அமைச்சர் மஹேந்திர சிங் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்.  அதேபோல் உத்தர பிரதேச பாஜக தலைவர் ஸ்வந்தரா தேவ் சிங் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். 

உத்தரப்பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கமல் ராணி கொரோனா காரணமாக நேற்று பலியானார். கடந்த 18ம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தீவிரமாக சிகிச்சை பெற்று வந்து இவர் நேற்று பலியானார். இவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கு மிகவும் நெருக்கமான தலைவர். தொடர்ச்சியாக பாஜக தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  
கொரோனாவை பொறுத்தவரைக்கும், தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர்தான் மாறனும்னு அவசியமில்ல.. சுற்றியிருக்கும் அல்லது சமீபத்தில் தொடர்பிலிருந்த யாராச்சும் ஒருத்தருக்கு கொரொனா வந்துட்டாகூட, தங்களைத்தாங்களே ஒருத்தர் தனிமைப்படுத்திக்கிறது சிறப்பு. 
 
தனித்திருப்போம்,  விலகியிருப்போம், வீட்டிலிருப்போம் என்பதுதான் இப்போதைக்கு கொரோனாவுக்கான சிறந்த தடுப்பு வழியா இருக்கு! இருந்தாலும், அரசியல்வாதிகள் களப்பணியாளர்களாக மாறும்போது வீட்டிலிருப்பது என்பது இயலாத காரியமாகிவிடுகிறது. இப்படியான நேரத்துல, மாஸ்க் அணிவது - சமூக இடைவெளி கடைப்பிடிப்பதெல்லாம் ரொம்பவே முக்கியம்.