ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் மத்திய அரசின் பொதுத்துறை கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகிறது. 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இங்கு கப்பல் கட்டுதல், கப்பல் பழுது பார்ப்பு, நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமானம் மற்றும் பழுது பார்ப்பு, கடலோர கட்டமைப்புகளின் வடிவமைப்பு அவற்றின் கட்டுமானம் ஆகிய பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையிலான ஒரு கட்டுமான பணியின் போது, இந்துஸ்தான் ஷிப்யார்டில் ராட்சத கிரேன் ஒன்று உடைந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் இன்று பலியாகியுள்ளனர்.

இந்த கிரேன் புதிது என்றும் சோதனை ஓட்டத்தில் இருந்த போது உடைந்து விழுந்தது என்றும் கூறி, மல்கபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு வழக்குகள் சம்பந்தப்பட்ட பிரிவில் பதிவு செய்யப்படும் என்றார் கமிஷனர் ராஜீவ் குமார் மீனா.

இந்த செய்தியை போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ் பாபு உறுதிபடுத்தியுள்ளார். சரக்கு பளு ஏற்று சோதனையின்போது கிரேன் உடைந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இதுதொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. தளத்தில் இருந்து கிரேன் அப்படியே அடியோடு சாய்ந்து கிடப்பதும், அதை அருகில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருப்பதும் புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.

மாவட்டக் கலெக்டர் வினய் சந்த் பேசும்போது, ``புதிய கிரேன் பொருத்தும் பணி நடந்து முடிந்தது. முழு அளவிலான பணியை செயல்படுத்த கிரேன் இயக்கப்பட்டது. இந்துஸ்தான் கப்பல் தளம் மற்றும் மாவட்ட அளவிலான உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றுள்ளார்.

விசாகப்பட்டினம் மாவட்டக் கலெக்டர் மற்றும் விசாகப்பட்டினம் நகர போலீஸ் கமிஷனர் இருவரும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 11.30 மணிக்கு சரிந்து விழுந்த இந்த பிரமாண்ட கிரேனுக்கு அடியில், 15 -க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே சிக்கியிருப்பதாகவும் 11 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய அதிகாரபூர்வமான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான ராட்சத கிரேன் சுமார் 70 டன் எடை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

புதிதாக வாங்கப்பட்ட கிரேன் எவ்வளவு எடை வரை தூக்குகிறது என்பதற்கான சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது. இந்தப் பணியில் அதிகாரிகளும் சில ஊழியர்களும் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர். கிரேன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவிலான எடையைத் தூக்க முயற்சி செய்யும்போது யாரும் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்த போது சுமார் 20 பேர் கிரேனுக்கு அருகில் வேலை செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், கிரேனுக்கு அடியில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிரேன் மீது 8 பேர் வரை இருந்ததாகவும் அதிக எடை காரணமாகவே கிரேன் கீழே சரிந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கான முழுமையான காரணம் தொடர்பாகத் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் விசாகப்பட்டினத்தில் நடக்கும் 4-வது மிக பெரும் விபத்து இது என்று கூறப்படுகிறது.