“கொரோனா மூன்றாவது அலையை எவ்வாறு தவிர்க்கலாம்” என்று, எய்ம்ஸ் மருத்துவர்கள் சில ஆலோசனைகளை முன் வைத்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலையின் பாதிப்பான தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. நாட்டில் தினசரி பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 29,689 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இந்தியாவில் கொரோனாவுக்கு மத்தியில் இயல்பு வாழ்க்கை திரும்பினாலும், கொரோனா மூன்றாவது அலையை இந்தியா நிச்சயம் எதிர்கொள்ளும் என்று, மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் தான், கொரோனா மூன்றாவது அலையை எதிர்நோக்கி உள்ள நாம், அதனை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்று, எய்ம்ஸ் மருத்துவர்கள் விழிப்புணர்வுக்காக சில டிப்ஸ் தந்திருக்கிறார்கள். அவற்றை தற்போது பார்க்கலாம். 

இது தொடர்பாக பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா பேசும் போது, “இந்தியாவில் கொரோனா 3 வது அலை தவிர்க்க முடியாதது” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“கொரோனா 3 வது அலையானது இன்னும் 6 முதல் 8 வாரங்களில் நாட்டைத் தாக்கக்கூடும்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அத்துடன், “டெல்டா மாறுபாட்டின் பரவல் காரணமாக, கொரோனா வைரஸின் கணிக்க முடியாத தன்மை ஆகியவை அந்த வைரஸை இன்னும் ஆபத்தானதாக மாற்றுகின்றது என்றும், மக்கள் தங்கள் பாதுகாப்பை மறப்பது 3 வது கொரோனா அலை  வருவதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கிறது” என்றும், அவர் கவலைத் தெரிவித்து இருக்கிறார்.

எனினும், “3 வது அலை முந்தைய அலைகளை விட பேரழிவு தரக்கூடியதா அல்லது கடுமையானதா என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும் எந்த ஒரு  முடிவுக்கும் வரவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார்.

மேலும், “6 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்த மக்கள் தொகையில் 2/3 பேர் கொரோனா ஆன்டிபாடிகளைக் கொண்டிருப்பதாக ஒரு சர்வே கூறுவதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியது என்றும், ஆனால் சுமார் 40 கோடி மக்கள் இன்னும் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், “கொரோனா வைரஸ்கள் அடுத்தடுத்து தொடர்ந்து உருமாறிக்கொண்டு, கணிக்க முடியாத அளவுக்கு இருப்பதால், நிரூபிக்கப்பட்டாலும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி தடுப்பூசி மற்றும் கொரோனா விதிகளைப் பின்பற்றுவது மட்டுமே” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

முக்கியமாக, “SARs - COV-2 வைரஸ் கணிக்க முடியாததாக இருக்கிறது என்றும், லேசான முதல் மிதமான நோய்த் தொற்று என இது மக்களுக்கு கடுமையான நோய் அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், மரணங்களுக்கு கூட வழிவகுக்கும்” என்றும், அவர் எச்சரித்து உள்ளார்.  

“இந்த கொரோனா வைரஸ் யாரையும் விடாது என்றும், வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் இரு வயதினரையும் பாதிக்கக்கூடும் என்பதால், அனைவரும் பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி மட்டுமே ஒரே சிறந்த வழி என்றும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் நீங்கள் வைரஸிலிருந்து விடுபடுவது  மட்டுமல்லாமல், கடுமையான தொற்று அபாயங்கள் மற்றுமு் அறிகுறிகளையும் இதன் மூலமாக முற்றிலும் தவிர்க்கலாம்” என்றும், அவர் ஆலோசனை கூறி உள்ளார்.

அதே போல், “ கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்து விட்டாலும், நோய் தொற்று முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல என்றும், மக்கள் கூட்டம் உள்ள பகுதிகளில் இன்னும் ஆபத்தானவை தான் என்றும், உங்கள் முகமூடியை அணியாமல் இருப்பது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள மக்களையும் பெரும் ஆபத்தில் இன்னும் ஆழ்த்துகிறது” என்றும், அவர் எச்சரித்து உள்ளார். 

அத்துடன், “பொது மக்கள் அனைவரும் முகமூடிகளை அணிவது, சமூக  இடைவெளியை பராமரித்தல் மற்றும் நெரிசலான பகுதிகளைத் தவிர்ப்பது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றுதல் மிக மிக அவசியம்” என்றும், அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். 

குறிப்பாக, “அத்தியாவசியமற்ற பயணங்கள் மற்றும் தேவையற்ற சுற்றுப்பயணங்களை தவிர்ப்பது மிக அவசியம் என்றும், அத்தியாவசியம், அவசியம், அவசரம் என்பன போன்ற தேவைகளுக்கு மட்டுமே மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.

“கொரோனா 3 வது அலையை நோக்கி காத்திருக்கும் நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது மிக அவசியம் என்றும், கொரோனா 2 வது அலையின் போது ஏற்பட்ட அதே அளவிலான அழிவைத் தவிர்க்கவும், 3 வது அலை ஏற்படுவதை தாமதப்படுத்தவும் இது போன்ற விதிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது மிக மிக அவிசயம்” என்றும், டாக்டர் ரன்தீப் குலேரியா வலியுறுத்தி உள்ளார்.