இந்தியாவில் 230 வகையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், கொரோனா 3 வது அலை ஆரம்பித்துவிட்டதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது.

உலகையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய். 

ஒட்டு மொத்த உலக பொருளாதாரம் தொடங்கி, தனி மனித பொருளாதாரம் வரை, இயல்பு வாழ்க்கையே முற்றிலுமாக முடக்கப்போட்டு, மனித உயிர்களை வேட்டையாடி விளையாடி வருகிறது கொரோனா என்னும் கொடிய தொற்று.

கொரோனாவுக்கு உலகின் பல நாடுகளும் தொடர்ந்து மருந்து கண்டுபிடித்து வரும் நிலையில், கொரோனாவும் தனது பங்கிற்கு புதிது புதிதாக உருமாற்றம் அடைந்து, புதிய புதிய வைரஸ் நோயாக உருவெடுத்து வருவது தான், ஒட்டுமொத்த உலக மக்களையும் மீண்டும் பீதியடையச் செய்துள்ளது.

அதாவது, தமிழகத்தில் கொரோனா நிலவரத்தைப் பார்க்கும் போது, “தினசரி கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் 100 க்கும் கீழ் குறைந்து, 17 மாவட்டங்களில் புதிய உயிரிழப்புகள் எதுவும் இல்லை” என்கிற நிலை உருவாகி உள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

ஆனால், இந்திய அளவில் பார்க்கும் போது, “கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசி போடும் வேகம் போதுமானதாக இல்லை” என்று யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, “உலகம் முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்பக் கட்டத்தை எட்டி உள்ளதாக” உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

முக்கியமாக, “இந்தியாவில் இது வரை 230 வகையான வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளதாக இன்சாகாக்” தெரிவித்து உள்ளது.

உலக அளவில் பார்க்கும் போது, கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கையானது இன்றைய தினம் 19 கோடியை தாண்டி உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையான 4,082,510 யை தாண்டி உள்ளது. 

இந்த சூழ்நிலையில் தான், “கொரோனாவின் 3 வது அலை ஆரம்பக் கட்டத்தை எட்டியுள்ளதாக” உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் ட்ரெட்ரோஸ் ஜெப்ரேயஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஐரோப்பா, வட அமெரிக்காவில் தடுப்பூசி அதிகளவில் போடப்பட்டு வருவதால், கொரோனா தொற்று பரவல் அங்கு குறைந்து உள்ளதாக” குறிப்பிட்டார்.

உலக அளவில் தொடர்ந்து 4 வது வாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், கிட்டதிட்ட 10 வாரங்களுக்குப் பிறகு தற்போது 2 வது முறையாக மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகவும்” அவர் கவலைத் தெரிவித்து உள்ளார். 

அத்துடன், “புதிதாக உருமாறிய டெல்டா வகை வைரஸ், இப்போது 111 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என்றும், இது உலகம் முழுவதும் இன்னும் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளதாகவும்” அவர் வேதனை தெரிவித்தார். 

“உருமாறிய ஆல்பா வைரஸ் 178 நாடுகளிலும், பீட்டா வைரஸ் 123 நாடுகளிலும், காமா வகை வைரஸ் 75 நாடுகளிலும் பரவி உள்ளதாக” அவர் கூறினார். 

“கொரோனா மரபணு வரிசை முறையைக் கண்காணித்து வரும் இந்திய, கொரோனா மரபியல் கூட்டமைப்பான இன்சாகாக் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் இது வரை 230 வகையான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக” விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

“இந்த உருமாறிய கொரோனா தொற்றுகள் யாவும், மனிதர்களுக்குத் தீங்கு விளைவிப்பவை அல்ல என்றும், ஆனால் சில உருமாறிய தொற்றுகள் தான் மிக ஆபத்தானவை” என்றும், அந்த அமைப்பு கூறியுள்ளதாகத் தெரிவித்தார். 

“கடந்த சில மாதங்களாக உருமாறிய வைரசின் 2 வகை டெல்டா வகைகள் கண்டறியப்பட்டன என்றும், ஆனால் தற்போது ஏஒய்3 என்ற மற்றொரு உருமாறிய வைரஸ் தற்போது புதிதாகக் கண்டறியப்பட்டு உள்ளது” என்றும், அவர் கூறினார்.

இந்த 230 வைரஸ்களில் 14  வகையான வைரஸ்கள், கடுமையான பிரிவில் வைக்கப்பட்டு உள்ளன என்றும், இதில் 8 வகையான வைரஸ்கள் மிகவும் கவலைக்குரிய பாதிப்பை ஏற்படுத்தும் பட்டியலில் இருப்பதாகவும், ஏற்கனவே டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகைகளை மத்திய அரசு ஆபத்தான வைரஸ் பட்டியலில் சேர்த்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.