“போராட்டம் என்ற பெயரில் பொது மக்களுக்குத் தொல்லை தர விரும்பவில்லை என்ற காரணத்தால், முழு அடைப்பு காலை 11 மணி முதல் 3 மணி வரை 
மட்டுமே நடைபெறும்” என்று, விவசாயத் தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.

மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் முற்றுகையிட்டுக் கடந்த 26 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்குக் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து உள்ளன. இதனால், நாடு முழுவதும் இன்று விவசாயிகள் போராட்டம் களைகட்டி உள்ளது. 

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடந்துவருவதையொட்டி அறிவிக்கப்பட்டிருக்கும் முழு அடைப்பு போராட்டம் தமிழகத்திலும் ஆதரவைப் பெற்றுள்ளது. 

டெல்லியில் முற்றுகையிட்டு விவசாயிகள் இன்றுடன் 13 வது நாளாக வெற்றிகரமாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசுடன் ஏற்பட்ட பல கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் இருந்து வருகிறது.

இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் தான முழு அடைப்பு போராட்டத்தை விவசாயிகள் சங்கங்கள் நடத்தி வந்தாலும், இந்த போராட்டத்தால், பொது மக்கள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளனர்.

இதன் காரணமாக, “இந்த முழு அடைப்பு போராட்டமானது, காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறும் என்றும்” தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக பேசிய பாரதீய கிசான் யூனியன் அமைப்பினர், “ நாங்கள் சாதாரண பொது மக்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பவில்லை. பொது மக்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில் எங்கள் போராட்டத்தை நாங்கள் காலை பகல் 11 மணிக்கு தொடங்குகிறோம். பிற்பகல் 3 மணிக்கு முடிக்க இருக்கிறோம். எங்களுக்கும் பொதுமக்கள் மீது அக்கறை இருக்கிறது” என்று, தெரிவித்து உள்ளனர்.

மேலும், பாரத் கிசான் யூனியனைச் சேர்ந்த ராகேஷ் டிக்தெய்த், “பொது மக்கள் அவர்களின் அடையாள அட்டையை காட்டிவிட்டுச் செல்லலாம்” என்றும், தெரிவித்து உள்ளார். 

“மருத்துவ சேவைகளான ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய சேவைகளுக்கும் நாங்கள் எந்தவித இடையூறும் ஏற்படாது” என்றும், அவர்கள் உறுதி அளித்து உள்ளனர்.

விவசாயிகள் தங்களது நியாயமான மற்றும் அடிப்படையான உரிமையான கோரிக்கையைக் கேட்டு இன்றுடன் 13 வது நாளாக விவசாயிகள், வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். இது வரை மத்திய அரசுடனான பேச்சு வார்த்தைகளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. பேச்சு வார்த்தையின் போது, துளியும் இறங்கி வராமல் மத்திய அரசு அடம் மற்றும் பிடிவாதம் பிடிப்பதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த காலங்களில் குற்றம்சாட்டி இருந்தனர். 

அதே போல், டெல்லியில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, விவசாயிகளின் போராட்ட புகைப்படங்களை இணையத்தில் பலரும் பதிவேற்றி வைரலாக்கி வருகின்றனர். இதில், சிலர் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தங்களது பகிரங்கமான கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, விவசாயிகள் மற்றும் பொது மக்களின் போராட்ட குணங்களை மத்திய அரசு கை கட்டி வேடிக்கை மட்டுமே பார்ப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுங்கள் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.