“இதே நிலை தொடர்ந்தால் விவசாயிகள் போராட்டம் டெல்லியோடு முடியாது” என்று, அரசியல் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், “புரட்சிக்கு வித்திடுகிறதா விவசாயிகள் போராட்டம்?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தியாவில் பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு தொடர்ச்சியாக இன்று 12 வது நாளாகப் போராடி வருவதோடு, மத்திய அரசுக்கு தங்களது கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். 

டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும், விவசாயிகள் அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அந்த குளிரையும் தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆனாலும், இந்த மக்கள் ஆட்சி நாட்டில் இந்த விவசாயிகளுக்காக, பாஜக தலைமையிலான மத்திய அரசு துளியும் இறங்கி வரவில்லை. மனசு மாற வில்லை. புதிதாக இயற்றிய சட்டத்தில், பிடிவதாகமாக இருக்கிறது. இதனால், மத்திய அரசு இப்படி பிடிவாதமாக இருக்க, அந்த சட்டத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது? என்று பொது மக்கள் குழும்பி போய் உள்ளனர்.

போராட்ட களத்தில் விவசாயிகளின் பிள்ளைகள் பலரும் விவசாயிகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டே, ஆன்லைனில் பாடமும் படித்து வருகின்றனர். இந்த காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதனால், இந்த சம்பவங்களைப் பார்க்கும் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு வித உணர்ச்சியைத் தூண்டி விடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் போராட்டம் பொதுமக்கள் மத்தியில் புரட்சிக்கு வித்திட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. 

அதன் படியே, நாளை மறுநாள் 9 ஆம் தேதி மீண்டும் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டாலும், நாளைய தினம் 8 ஆம் தேதி ஏற்கனவே அழைப்பு விடுத்தபடி, நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று, அறிவித்துள்ள விவசாய சங்கங்கள், இந்த போராட்டத்திற்கு பொது மக்களுக்கும் அழைப்பு விடுத்து உள்ளது. இதனால், போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரின் மன உணவிலும் புரட்சி நாளை பற்றி எரிய இருக்கிறது. இதனால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போது கடும் அதிர்ச்சியடைந்து உள்ளதாகவே கூறப்படுகிறது.

அதே போல், இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்குப் பல வெளிநாட்டுத் தலைவர்களும் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் படி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 36 எம்.பி.க்கள் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர். முக்கியமாக, “மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்றும், அவர்கள் அமைதி வழியில் போராட அனுமதிக்க வேண்டும்” என்றும், விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. சபையும் கருத்து தெரிவித்து உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து, நாளை நடைபெறும் போராட்டத்தில் களத்தில் குதிக்க உள்ளன.

அதன் படி, இந்த முழு அடைப்புக்குப் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவையும் தெரிவித்து உள்ளது. 

இதைப்போல இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், தெலுங் கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகளும், விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்து உள்ளன. 

அத்துடன், விவசாயிகளின் போராட்டத்துக்கு டெல்லியில் ஆளும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து, விவசாயிகளின் பேரணி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள புராரி மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சியினரும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகளும் வந்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், நடமாடும் கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர். 

விவசாயிகள் போராட்டம் இன்றுடன், 12 வது நாளாக நீடிக்கும் நிலையில், டெல்லி எல்லையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆய்வு செய்ய உள்ளார். அவருடன் மாநில அமைச்சர்களும் சென்று ஆய்வு செய்கின்றனர். அப்போது, அவர் விவசாயிகளை சந்தித்தும் பேச உள்ளார்.

மேலும், “இதே நிலை தொடர்ந்தால், விவசாயிகளின் போராட்டம் டெல்லியோடு முடியாது” என்று, மத்திய அரசுக்குத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தைத் தீவிரமாக எடுத்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை. அரசுக்கு ஞானம் பிறக்கும் என நம்புகிறேன். அரசு விவசாயிகள் பிரச்சினையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் போராட்டம் டெல்லியோடு முடியாது. நாட்டின் மூலை, முடுக்குகளில் இருந்தும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்” என்றும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் ஏற்கனவே போராட்டத்தை அறிவித்துள்ளன. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழகத்தின் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் ஆங்காங்கே போராட்டத்தை கையில் எடுத்து வருகின்றனர்.

அத்துடன் ஐ.என்.டி. யு.சி., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 முக்கிய தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பும், இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

தமிழகத்தில், ஏற்கனவே, கடந்த வாரம் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் குதித்து இருந்தன. 

தற்போது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்த முழு அடைப்பில் பங்கேற்கப்போவதாக அறிவித்து உள்ளன. 

வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் மற்றும் தமிழக விவசாய சங்கம் சார்பில் தருமபுரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேபோல், டெல்லியில் தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம் காரணமாக, இது வரை அமைதி காத்து வந்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து தனது மெளனத்தை கடந்த வாரம் கலைத்துள்ளார். “டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா?” என்றும், அண்ணா ஹசாரே ஆவேசமாக கேள்வி எழுப்பி இருந்தார். இது, இணையத்தில் வைரலானது. 

இன்னும் முக்கியமாக, விவசாயிகளை ஆதரித்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் விருதுகளைத் திருப்பி வழங்கவும் முடிவு செய்து உள்ளனர்.

அந்த வகையில், பிரபல குத்துச்சண்டை வீரரும், ஒலிம்பிக் பதக்கம் பெற்றவருமான விஜேந்தர் சிங்கும், தனக்கு வழங்கப்பட்ட ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திரும்ப ஒப்படைக்கப்போவதாக கூறியுள்ளார். 

ஏற்கனவே விவசாயிகளுக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மத்திய அரசிடம் திருப்பி அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் தற்போது அறிவித்துள்ளார்.

இதனால், பாஜக தலைமையாலான மத்திய அரசுக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருவது  குறிப்பிடத்தக்கது.