சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்தன. அந்த செய்திகள் யாவும் உண்மை என்பதற்குச் சாட்சி கூறுகிறது, இந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அடுத்த பாலோத் மாவட்டத்தில், இந்த துயர சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்குள்ள பாலோத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், அந்த கிராமத்தைச் சேர்ந்த 5 சிறுமிகள் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர், “என் வீட்டில் டி.வி. பார்க்கலாம் வாருங்கள், தின் பண்டம் தருகிறேன்” என்று, சிறுமிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி, வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டிற்கு வந்ததும் சிறுமிகள் 5 பேரும், சிறிது நேரம் டி.வி. பார்த்துள்ளனர். அப்போது, அந்த சிறுமிகளுக்கு அந்த முதியவர் தின் பண்டம் கொடுத்துள்ளார். அதன் 
பிறகு, சிறுமிகளிடம் சில ஆசை வார்த்தைகள் கூறி, ஒவ்வொரு சிறுமியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், சிறுமிகள் அனைவரும் வலியால் கத்தி உள்ளனர்.

இதனையடுத்து, பயந்துபோன அந்த முதியவர், அவர்களை வீட்டிற்கு அனுப்பி உள்ளார். அப்போது, “இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்றும், அவர் கடுமையாக மிரட்டி” அனுப்பி உள்ளார்.

அதில், வீடு திரும்பிய சிறுமிகளில் 4 பேர் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். அதில் ஒரே ஒரு சிறுமி மட்டும், அந்த தெருவில் நின்று வலியால் அழுதுகொண்டு நின்றுள்ளார்.

அப்போது, சிறுமியைப் பார்த்த அவரது தாயார் “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டுள்ளார். அதற்கு, அந்த முதியார் செய்த செயல்பாடுகள் குறித்து, முழுவதையும் சிறுமி தன் தாயாரிடம் கூறி மேலும் அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், மற்ற சிறுமிகளிடமும் இது குறித்து, அவர் நேரில் சென்று விசாரித்துள்ளார். அவர்களும் ஆமாம் என்று கூறியதோடு, தங்களது பெற்றோரிடமும் இது குறித்து புகார் கூறி உள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த 5 சிறுமிகளின் பெற்றோர்களும், அங்குள்ள அர்ஜூனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த முதியவரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

இதனையடுத்து நடத்தப்பட்ட முதற் கட்ட விசாரணையில், அந்த முதியவர் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. மேலும், அந்த பகுதியில் வேறு யாரிடமும் இதுபோன்று அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் அவர் ஈடுபட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், பாதிப்புக்குள்ளான 5 சிறுமிகளும், அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுமிகளுக்கு பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே,  65 வயது முதியவர் ஒருவர் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், சத்தீஸ்கர் மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.