2019-20ஆம் நிதியாண்டுக்கான மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.1,65,302 கோடியை  மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் தமிழகத்தின் பங்காக மத்திய அரசு ரூ.12,305 கோடி வழங்கியுள்ளது. அதேபோல் புதுச்சேரிக்கு ரூ.1,057 கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கியுள்ளது.
 
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017-ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. இந்த வரி முறையில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து 5 ஆண்டுகளுக்கு இழப்பீடுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் வளர்ச்சியைப் பொறுத்து இந்த இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் வளர்ச்சி 14%ஐ விடக் குறைவாக இருந்தால் இந்த இழப்பீடு வழங்கப்படும். இந்த முறை இந்த இழப்பீட்டுத் தொகையை அரசு தவணை முறையில் வழங்குகிறது. அதன்படி, இரண்டாவது கட்டமாக 2019-2020 நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலவகையிலும் பிரதமரை வலியுறுத்தி வந்தார். ஒவ்வொரு முறை பிரதமருடனான முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டங்களிலும் இந்த பாக்கியை விடுவிக்குமாறு வற்புறுத்தி வந்தார் முதல்வர் எடப்பாடி. தற்போது கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான செலவுகளும் அதிகரித்து வருகின்றன. மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் நிதி போதாது என்பதால், கூடுதல் நிதியை வழங்குமாறு பிரதமருடனான காணொலி கூட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து வருகிறார். அதில் ஜிஎஸ்டி இழப்பீடும் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில்தான், மத்திய அரசு சமீபத்தில் மார்ச் 2020க்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.13,806 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இந்த தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 2019-20 வரை முழு இழப்பீடும் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டுக்கான மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ.1,65,302 கோடி ஆகும். 2019-20ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட செஸ் வரித் தொகை ரூ.95,444 கோடி ஆகும்.

2019-20-க்கான இழப்பீட்டை வெளியிட, 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட செஸ் தொகையின் நிலுவைத் தொகையும் பயன்படுத்தப்பட்டது. மேலும், மத்திய அரசு ரூ.33,412 கோடியை இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து இழப்பீட்டு நிதிக்கு மாற்றியுள்ளது.

இதன்மூலம் 2019-20 நிதியாண்டுக்கு முழு ஜிஎஸ்டி  இழப்பீடு தொகையும் மாநிலங்களுக்கு  வழங்கப்பட்டு விட்டன என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு கடுமையான நிதிச் சுமையில் இருப்பதாக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், இந்த ஜிஎஸ்டி நிதி விடுவிப்பு மிகவும் உதவியாக அமையும்.  

-பெ.மதலை ஆரோன்.