ஆந்திராவில் இளம் பெண் ஒருவர், “தான் ஐபிஎஸ் அதிகாரி” என்று கூறி 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி 
உள்ளது.

இந்த சமூகத்தில் திருமணம் மற்றும் பாலியல் தொடர்பான மோசடிகளை பெரும்பாலும் ஆண்களே செய்வதாகத்தான் நாம் அன்றாட செய்திகளில் கண்டும் பார்த்தும் வந்திருக்கிறோம். ஆனால், தில்லாலங்கடி ஆண்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில், இளம் பெண் ஒருவர் தான் ஐபிஎஸ் அதிகாரி என்று பொய் சொல்லி, 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஞ்சநேயலு, டென்மார்க் நாட்டில் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். இவர், திருமணத்திற்காக, மேட்ரிமோனியல் மூலம் பதிவு செய்து இருந்தார்.

அப்போது, திருப்பதியைச் சேர்ந்த சொப்னா என்னும் இளம் பெண், தான் ஐபிஎஸ் அதிகாரி என்றும், திருமணத்திற்காக அவரும் பதிவு செய்து இருந்தார். இதன் மூலம் இருவரும் அறிமுகமாகி உள்ளனர்.

அதன்படி, அவர்கள் இருவருக்கம் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டென்மார்க்கிலிருந்து ஆஞ்சநேயலு ஊர் திரும்பி உள்ளார். அதன்படி, அவர்களுக்குக் கடந்த டிசம்பவர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு, அந்த புதுமண தம்பதிகள் இருவரும் ஐதராபாத்தில் 3 மாதங்கள் இன்பமயமாக தங்களது தாம்பத்திய வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். 

அப்போது, தனக்கு 3 மாதம் விடுமுறை முடிந்த நிலையில், ஆஞ்சநேயலு, மீண்டும் டென்மார்க் கிளம்பி உள்ளார். அப்போது, தன் மனைவியை அவர் டென்மார்க் வரும்படி அழைத்துள்ளார். ஆனால், அவரோ “எனக்கு போலீஸ் வேலை தான் முக்கியம். அந்த வேலையை நான் மிகவும் பிடித்துச் செய்கிறேன். இப்போது, நீங்கள் போங்கள். பின்னாடி பார்க்கலாம்” என்று கூறி கணவனை டென்மார்க் அனுப்பி வைத்துள்ளார் சொப்னா.

கணவர் ஆஞ்சநேயலு டென்மார்க் சென்ற நிலையில், சொப்னா ஐதராபாத்தில் உள்ள அதே வீட்டிலேயே தங்கி உள்ளார். சில நாட்கள் சென்ற நிலையில், பிரகாசம் மாவடத்தில் உள்ள தன் மாமனார் - மாமியார் வீட்டிற்கு வந்த சொப்னா, “உங்கள் மகன் என்னை ஏமாற்றிவிட்டார். மரியாதையாக எனக்கு நஷ்ட ஈடாகப் பணம் கொடுங்கள். நான் அமைதியாகப் போய் விடுவேன்” என்று, மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஆனால், தன் மருமகள் ஏதோ புரியாமல் கோபமாக இருக்கிறார், அவரை எப்படியும் சமாதானப்படுத்திவிட வேண்டும்” என்று ஆஞ்சநேயலுவின் பெற்றோர் நினைத்து, அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், எதற்கும் இறங்கி வராத சொப்னா, பணத்திலேயே குறியாக இருந்துள்ளார். மேலும், அவர்களைக் கைது செய்வேன் என்றும் அவர் மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், பயந்துபோன மாமனார் - மாமியார் அங்குள்ள டோணகொண்டா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சொப்னாவை அழைத்து பேசி உள்ளனர்.

அந்த விசாரணையில், சொப்னா ஐபிஎஸ் அதிகாரி இல்லை என்றும், அவர் போலியாக இப்படி ஏமாற்றி வந்ததும் முதலில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதன்படி, சொப்னா என்பது அவர் பெயர் இல்லை என்றும், அவர் உண்மையான பெயர் ரம்யா என்பதும் தெரிய வந்தது.

அத்துடன், இதற்கு முன்பு சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, அவரிடம் பணம் பறித்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

மேலும், அந்த மாநிலத்தில் உள்ள ஆத்மகூரைச் சேர்ந்த சுதாகார் என்பவரையும் வெவ்வேறு பெயர்களில் திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் சில மாதங்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, அதன் பிறகு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிப் பறித்துக்கொண்டதும் தெரிய வந்தது.

இதில், டென்மார்க் மாப்பிள்ளை ஆஞ்சநேயலு 3 வதாக திருமணம் செய்துகொண்டார் என்றும், இதனால் அவர் தற்போது 3 மாதம் கருவுற்று இருப்பதும் தெரிய வந்தது.

சொப்னா என்கிற ரம்யா தற்போது கருவுற்று இருப்பதால், அவரை அங்குள்ள அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அத்துடன், இன்னும் எத்தனை நபர்களை இவர் இது போல் ஏமாற்றி இருக்கிறார் என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, ஆஞ்சநேயலுவின் பெற்றோர், “எப்படியாவது இந்த மோசடி பெண்ணிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று போலீசாரிடம் மன்றாடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.