16 வயது சிறுவன் ஓட்டிவந்த டிராக்டர்.. ஹோட்டலில் புகுந்தது ஒருவர் பலி!

16 வயது சிறுவன் ஓட்டிவந்த டிராக்டர்.. ஹோட்டலில் புகுந்தது ஒருவர் பலி! - Daily news

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 16 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டர் ஹோட்டலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மணல், ஜல்லி வியாபாரம் செய்து வருகிறார்.  இவரிடம் 16 முதல் 18 வயதுடைய இளைஞர்கள் ஏராளமானோர் டிராக்டர் ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் ராஜாவுக்குச் சொந்தமான டிராக்டரை 16 வயது சிறுவன் ஒருவன், ஆத்தூர் வ.வு.சி நகர் பகுதியில் இருந்து முல்லைவாடி பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது  சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், புதுப்பேட்டை பகுதியில்  சாலையோரம் அமைந்துள்ள சரவணன் என்பவருக்குச் சொந்தமான உணவகத்திற்குள் அதிவேகமாகச் சென்று புகுந்தது.

அதனைத்தொடர்ந்து இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட்டலின் அருகாமையில் இறைச்சிக்கடை நடத்தி வந்த ஆறுமுகம் என்பவர் மீது மோதியது. டிராக்டர் மோதிய இந்த விபத்தில் ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மேலும்  ஓட்டலில் வேலை பார்த்து வந்த பரோட்டா மாஸ்டர் மருது உள்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.   

இந்நிலையில் பரோட்டா மாஸ்டர் மருதுவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான டிராக்டரை ஓட்டிய 16 வயது சிறுவனிடம் தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்தூர் பகுதியில் பரவலாக  சிறுவர்கள் பலர் மினி டிராக்டர்கள் ஓட்டி வருவதாகவும்,   இதனால் சாலையில் செல்லவே அச்சமாக  இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.   சிறுவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Leave a Comment