பூசாரியை கார் ஏற்றி கொலை.. கள்ளக்காதலால் நேர்ந்த சோகம்!

பூசாரியை  கார் ஏற்றி கொலை.. கள்ளக்காதலால்  நேர்ந்த சோகம்! - Daily news

கள்ளக்காதலை கண்டித்ததால் பூசாரியை கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் அருப்புக்கோட்டையில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவை சேர்ந்தவர் செந்தில் அவருக்கு வயது 46. காளியம்மன் கோயில் பூசாரியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் செந்திலின் உறவுக்காரப்பெண்ணான  22 வயது அனிதா என்பவருக்கும் பந்தல்குடி லிங்காபுரத்தை சேர்ந்த 27 வயது பெத்துக்குமார் என்பவருக்கும் திருமணத்திற்கு முன்பே தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

அதன் பின்னர் அனிதாவிற்கு வீரசோழனை சேர்ந்த பாண்டி என்பவருடன் திருமணமாகி உள்ளது. பாண்டி வெளிநாட்டில் இருப்பதால் திருமணம் முடிந்த பின்பும் அனிதாவுடன் பெத்துக்குமார் போனில் பேசி பழகி வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த செந்தில் பெத்துக்குமாரை திருமணமான பெண்ணுடன் ஏன் பேசுகிறார் என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெத்துக்குமார் நேற்று கொப்புசித்தம்பட்டி விலக்கில் நின்று பேசியபோது செந்திலுக்கும் பெத்துகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பெத்துக்குமார், பெத்துக்குமார் தாய் விஜயலெட்சுமி, பெத்துக்குமார் தம்பி விஜயகுமார் மற்றும் பெத்துக்குமாரின் நண்பர்களான ராஜபாண்டி , கோபிநாத், பாண்டியராஜ் ஆகிய 6 பேர் செந்திலை கடுமையாக தாக்கியுள்ளனர். 
 
மேலும் இதில் படுகாயமடைந்த செந்தில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பெத்துக்குமார் செந்தில் மீது காரை ஏற்றியுள்ளார். 6 பேர் சேர்ந்து தாக்கியதிலும் கார் மோதியதிலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய  செந்திலை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பூசாரி செந்திலின் மகன் 21 வயதான சூர்யா அளித்த புகாரின் அடிப்படையில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெத்துக்குமார் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். இதில் பெத்துக்குமார் மற்றும் அவருடைய தாய் விஜயலட்சுமிக்கு உடலில் காயம் இருந்ததால் அவர்கள் இருவர் மட்டும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள விஜயகுமார், ராஜபாண்டி , கோபிநாத், பாண்டியராஜ் ஆகிய நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Comment