அமெரிக்காவில் இதுவரை 86 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகின்றது. அங்கு இதுவரை 34 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மட்டுமே தற்போது வரை தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். ஏறத்தாழ 50 லட்சம் பேர் (49,87,647) தற்போது வரை கொரோனா தொற்றுடன் போராடி வருகின்றனர். இதுவரை 2,25,227 பேர் நாடு முழுவதும் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழப்பு விகிதத்திலும் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது. 

இந்நிலையில் ``தொற்று பரவலை அதிபர் தடுக்க தவறிவிட்டார்" என ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர்களின் தலைவரான மார்க் மெடோஸ் செய்தி நிறுவனங்கள் கேள்வியெழுப்பியபோது, ``நாங்கள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை என்றும், ஏனெனில் இது ஒரு சாதாரண காய்ச்சல் போல ஒன்றுதான்" என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசியிருக்கும் அவர், ``சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் போன்றவை அதனை குறைக்க முன்னுரிமையாக இருக்க வேண்டும்" என்று வாதிட்டார். வரும் நவம்பர் மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மெடோஸ்ஸின் இந்த கருத்து மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளால் வருகிற பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட கூடும் என்று தெரியவந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. மட்டுமன்றி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா தொற்றை கையாண்ட விதம் வருகிற அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ``குறைந்த அளவிலான கொரோனா திறன் சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு மருந்துகளில்லா நிலையில், குளிர்காலத்தில் பொது சுகாதாரத்திற்கு சவாலாக தொடரும் கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டும்" என்று அந்நாட்டு மருத்துவக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், `பெரிய அளவில் பாதிப்புகள் சரிவை நோக்கி சென்றாலும், குளிர்காலத்தில் உயரும் நிலை ஏற்படும்.  தொற்று விகிதம் மற்றும் மரணங்கள் ஆகியவற்றின் உயர்வு காணப்படும் சூழலில், கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதில் அடிப்படை இல்லை.  அது உண்மை என நாங்கள் நம்பவுமில்லை' என்றும் சொல்லப்பட்டது.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட கூடும்.  ஆனால் ஒவ்வொருவரும் முக கவசங்கள் அணிவதன் வழியே 1.3 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.

இந்தளவுக்கு ஆபத்திருப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில், ட்ரம்ப்பின் உதவியாளர் இந்தளவுக்கு அஜாக்கிரதையாக பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.