கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்கான எண்ணிக்கை, உலகளவில் ஒன்பது லட்சத்தை கடந்துவிட்டது. ஒரு நாளில் ஏற்படும் அதிக உயிரிழப்புக்கான பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா தினமும் வந்துவிடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 90,000 த்துக்கும் மேலான புதிய கொரோனா நோயாளிகளுக்கான எண்ணிக்கையும், ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழந்தோர் எண்ணிக்கையும் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா ஆபத்து அதிகம் உடையவர்கள் பட்டியலில் மருத்துவர்களும் செவிலியர்களும் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றன. இதனால் உயிரிழந்த செவிலியர்களும் அதிகம்தான். அப்படி இதுவரை உலகளவில் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்கள் பற்றி, செவிலியருக்கான சர்வதேச அமைப்பு அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :

``உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

கொரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இதனால் பாதிப்பு அதிகரிக்கிறது.பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை அளிப்பதில் செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானது. உலக முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான செவிலியர் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், உலக முழுவதும் கொரோனா வைரசுக்கு இதுவரை 1,000 செவிலியர் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்புகள் அனைத்தும் சுவாச கோளாறு காரணமாக நடந்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரப் பணியாளர்களை காக்க அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" 

என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனாவால் இந்தியாவில் எந்தத் துறையினருக்கு எந்தளவுக்கு பாதிப்பு, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்கள் என்னென்ன என்பது பற்றி பிரத்யேகமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதன்படி, அவர் அதை தெரிவிக்கவும் செய்தார். ஆனால் அவரது பேச்சில் பணியின் போது கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவல் மட்டும் இடம்பெறவில்லை. 

இது சர்ச்சையானதை தொடர்ந்து, இது தொடர்பாக பேசிய சுகாதாரத்துறையின் இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய், ``சுகாதாரத்துறை மாநில அரசுகளை சார்ந்தது என்பதால் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கான காப்பீடு மற்றும் இழப்பீடு தொடர்பான தகவல்கள் தகவல்கள் மத்திய அரசிடம் இல்லை" என்றார்.
 
ஆனால் மத்திய சுகாதாரத்துறையின் இந்த கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

``இந்தியாவில் கொரோனா காரணமாக 328 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் குறைந்தபட்ச வயதுடைய மருத்துவர் 27 வயதுடைய இளம் மருத்துவர். அதிகபட்ச வயது 85 வயதுடைய மூத்த மருத்துவர் ஆகும்.

இந்தியாவை தவிர வேறு எந்த ஒரு நாடும் கொரோனாவுக்கு இத்தனை அதிக அளவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழப்புகளை
சந்திக்கவில்லை.

ஆனால் தொற்றுநோய்களின் போது சுகாதாரப் பணியாளர்களின் பங்களிப்பை ஒப்புக் கொண்டாலும், இந்த நோயால் உயிரிழந்த மருத்துவர்கள் பற்றி சுகாதார அமைச்சர் குறிப்பிடவில்லை. 

நாடு முழுவதும் எத்தனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர் மற்றும் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் என்ற விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்றால் அது பெருந்தொற்று சட்டம் 1897 மற்றும் பேரழிவு மேலாண்மை சட்டத்தை நிர்வகிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டது.

கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவ ஊழியர்கள்கள் தியாகிகளாக போற்றப்பட வேண்டும். ஆனால், ஒரு பக்கம் மருத்துவ பணியாளர்களை கொரோனா வாரியர்ஸ் என கூறி மறுபக்கம் அவர்களை தியாகிகளாகவும், அவர்களது குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்களையும் கொடுக்க மறுத்து மத்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது"

என மருத்துவ சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.