உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்தும் வகையில், ஸ்புட்னிக்-5 என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷியா கடந்த மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டது. 

இது குறித்து அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், “உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை ரஷியா பதிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டு உலகை அதிர வைத்தார். ஆனால் தடுப்பூசி உருவாக்கத்தில் பல்லாயிரகணக்கானோருக்கு செலுத்தி சோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை குறித்த விவரங்களை அந்த நாடு வெளியிடாதது, உலக நாடுகளை சந்தேகப்பார்வை பார்க்க வைத்தது. தடுப்பூசி விஷயத்தில் ரஷியா அவசரப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
 
இருப்பினும் அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ, கொரோனா தடுப்பூசி உற்பத்தி அடுத்த 2 வாரங்களில் தொடங்கும் என கூறி மேலும் பரபரக்க வைத்தார். அது மட்டுமல்லாமல், இந்த தடுப்பூசி தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் ஆதாரமற்றவை எனவும் அவர் நிராகரித்தார்.

இந்த சூழலில் சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் புரூஸ் அய்ல்வார்டு கூறுகையில், ``ரஷியாவின் தடுப்பூசி பற்றி முடிவு செய்வதற்கு எங்களிடம் (உலக சுகாதார நிறுவனத்திடம்) போதிய தகவல்கள் இல்லை. உலக சுகாதார நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், மொத்தம் 9 தடுப்பூசிகள் இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ரஷிய தடுப்பூசி, அந்த 9 தடுப்பூசிகளில் ஒன்றாக இல்லை. மேலும், இந்த தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்களை பெறுவதற்கு உலக சுகாதார நிறுவனமானது, ரஷியாவுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என்று தெரிவித்திருந்தார்.
 
இப்படி முன்னுக்குப் பின்னாக, பல தகவல்கள் ரஷ்ய தடுப்பூசி குறித்து வெளிவந்துக் கொண்டிருந்தன. இருப்பினும், நாளுக்கு நாள் உலகில் தீவிரமடைந்து வரும்ம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை ரஷ்யா மட்டுமே தடுப்பூசி கண்டறிந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. 

இந்நிலையில் ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். ஏற்கெனவே ‛Sputnik-V' என பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசியை கடந்த ஆகஸ்டு மாதம் பதிவு செய்து தற்போது உற்பத்தியை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்திருந்தார் ரஷ்யா. இந்நிலையில் ரஷ்யா தனது இரண்டாவது தடுப்பூசியையும் கண்டறிந்து இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்பது, பலருக்கும் ஆச்சர்யத்தையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றது.

ரஷ்யா இப்போது கண்டறைந்து வரும் கொரோனா தடுப்பூசிக்கு, ‛Epivacorona' என பெயரிடப்பட்டுள்ளது. இது, அதிகாரபூர்வமாக ரஷ்யாவின் இரண்டாவது தடுப்பூசியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த தடுப்பூசி பதிவை அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிக்கப்போவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் கூறியது. ரஷ்யாவின் சுகாதார அமைப்பு இப்போது கொரோனாவை திறம்பட எதிர்கொள்ள தயாராக உள்ளது என ரஷ்ய உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் புதின் கூறினார். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மனித உயிர்களின் மதிப்பினை உணர்ந்து நாட்டின் சுகாதாரத்துறையும், கொரோனா முன்கள பணியாளர்களும் தங்களின் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இப்போது நம் நாடு கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் உள்ளது என தெரிவித்தார்

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தடுப்பூசி பலனளிக்கவில்லை என்பதால்தான், இந்த அடுத்த தடுப்பூசியின் அறிவிப்பா என்றும் ; இந்த தடுப்பூசியாவது முழுமையான பலனை தருமா என்றும் அறிவியலாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முந்தைய தடுப்பூசியை போலவே, ரஷ்யா இந்த தடுப்பூசிக்கும் உலக சுகாதார நிறுவனத்திடம் ஒப்புதல் வாங்காமல்தான் இருக்கிறதென சொல்லப்படுகிறது.