தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி... கடந்த சில தினங்களாகவே கொரோனா நோயாளிகளுக்கான எண்ணிக்கையும், பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துக் கொண்டே போகின்றது. இதன் விளைவாக, இப்போது வரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுளளது. அவர்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர், குணமாகி நலமுடன் வீடு திரும்பிவிட்டார்கள். 39,000 த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

அதிகரித்துக்கொண்டே போகும் நோயாளிகளின் பட்டியலில், அறிகுறிகள் குறைவாக இருக்கும் கொரோனா பாதிப்பு ம் மற்றும் அறிகுறிகளற்ற கொரோனா பாதிப்பு ஆகியவை நாம் அடிக்கடி கேள்விப்படுகிற ஒன்றாக இருக்கிறது.

இந்த அறிகுறிகளற்ற கொரோனாவால் ஆபத்து இல்லை என்றும் பலரும் சொல்லி வருகின்றனர். காரணம், இது மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது என்ற தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். அப்படியொரு மருத்துவரான, மரியா வான்கெர்கோவ் கடந்த மாதம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்,

``எங்களிடம் உள்ள தரவுகள், ஒரு அறிகுறியற்ற கொரோனா தொற்றுள்ள நபர், மற்றொருவருக்கு கொரோனா தொற்றை பரப்புகிறார் என்பது மிகவும் அரிதாகவே தோன்றுகிறது. இப்படி அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிற நபர்கள், தொடர்பு தடம் அறிதல் மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள்.

இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதில்லை என்பது தொடர்பு தடம் அறிந்த நாடுகளின் தரவுகளில் இருந்து தெரிய வந்திருக்கிறது. இதெல்லாம் மருத்துவ இதழ்களில் இனிதான் வெளியாக வேண்டியதிருக்கிறது. இந்த தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் மறு ஆய்வு செய்கிறது" என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், அறிகுறிகளற்ற நோயாளிகள் மீது பல நாடுகளில் இருந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒருபகுதியாக, தென் கொரியாவில் இதுபற்றிய ஆய்வு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.

25 வயதை ஒட்டிய, 303 நபர்களுக்கு மத்தியில் செய்யப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், ``தீவிரமான மற்றும் மிகத்தீவிரமான அறிகுறிகளுடைய ஒரு கொரோனா நோயாளியை, எப்படி தனிமைப்படுத்துகிறோமோ அப்படித்தான் இவர்களையும் நாம் தனிமைப்படுத்த வேண்டும்" என்று அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்று, அந்தளவுக்கு வேகமாக பரவக்கூடியது" எனக்கூறி எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இதேபோல ஜூன் மாதம் சீனாவை சேர்ந்த ஒரு ஆய்வுக்குழுவும் தங்கள் பங்குக்கு ஒரு ஆய்வு செய்திருந்தார்கள். அதில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிற நபர்கள் பயன்படுத்துகிற டூத்பிரஷ், முக கவசம், டவல் போன்ற தனிப்பட்ட உடைமைகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டிருந்தது. அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் 300 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த 1,174 பேரை பரிசோதனை செய்ததில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று தாக்கம் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. இதெல்லாம் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகிறவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா எளிதாக பரவாது என்பதற்கு ஆதாரமாக அமைகின்றன.

இப்படி முன்னுக்கு பின் முரணாக இருக்கும் காரணத்தினாலேயே, இப்போதைக்கு தொற்று உறுதிசெய்யப்படுபவர்கள், தயவுசெய்து மருத்துவ ஆலோசனையை பெற்று, முடிந்தவரை மருத்துவமனையில் இருங்கள் என அரசுகள் அறிவுறுத்த தொடங்கிவிட்டன. இருப்பினும், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், ஒருகட்டத்துக்கு மேல் அனைவரையும் மருத்துவமனையில் தங்கவைக்க இயலாது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. நடைமுறை சிக்கல்களை தாண்டி, சூழலை கையாள வேண்டிய கடமை, அரசுக்கு மட்டுமன்றி, ஒவ்வொரு குடிமகனுக்கும், நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கிறது.