தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக தொடர்ச்சியாக தரமான ஃபீல் குட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். தனது முதல் படமான போடா போடி திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் இவர் இயக்கிய இரண்டாவது படமான நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் இந்த நீண்ட இடைவெளியில் நானும் ரவுடி தான் திரைப்படத்திற்காக எத்தனையோ நடிகர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் கடந்து வந்துள்ளார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் நமது கலாட்டா தமிழில் கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் நேர்காணலில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டது எப்படி என்பதை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில்,

“உண்மையில் இந்த கதையை முதல் முதலில் சொன்னது விஜய் சேதுபதி அவர்களுக்கு தான். அப்போது விஜய் சேதுபதி சார், “ஏன்டா இப்படி எல்லாம் கதை சொல்கிறாய்” என்றார். ஏற்கனவே போடா போடி திரைப்படத்தின் சமயத்தில் படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி எனக்கு போன் செய்து, “நான் பீட்சா படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி பேசுகிறேன்”, என படத்தை பாராட்டி பேசினார். அப்போதே அவரது பெயரை பீட்சா ஹீரோ விஜய் சேதுபதி என எனது போனில் பதிவு செய்து கொண்டேன். பின்னர் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் சந்திக்க நேர்ந்தது அப்போது அவரை சந்திக்க வேண்டும் என கேட்டிருந்தேன். போடா போடி திரைப்படம் சரியாக போகாத காரணத்தினால் அடுத்து எனக்கு எந்த வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. ஹீரோக்களிடம் சென்று கதையே சொல்ல முடியவில்லை எனவே ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒரு கதையை தயார் செய்தால் அதை புரிந்து கொள்ளும் கதாநாயகிகள் ஏற்றுக் கொள்வார்கள் என தெரிந்து தான் இந்த கதையை தயார் செய்து விஜய் சேதுபதி அவர்களிடம் சென்றேன். கதையை சொன்னேன் கதையைக் கேட்ட அவர், “என்ன இது இப்படி இருக்கிறது இரண்டாவது பாதியை சொன்னபோது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. ஹீரோவுக்கு ஒன்றுமே இல்லையே” என அவர் சொன்னார். முதலில் அவர்தான் கதையை கேட்டு இப்படி ஒரு பதில் சொன்னார். பின்னர் அவர் ஒரு நான்கு பேரை பரிந்துரை செய்து அனுப்பினார். அவர் சொன்ன ஆட்கள், நான் பார்த்த ஆட்கள் என இது ஒரு இரண்டு ஆண்டுகள் நகர்ந்தது. இந்த படம் சரியாக இருக்குமா இல்லையா இந்த காமெடி சரியாக செட் ஆகுமா ஆகாதா என்று அந்த சந்தேகங்களை கடந்து வரவே முடியவில்லை. நீங்கள் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பார்த்தீர்கள் என்றால், இரண்டு வில்லன்கள் ஹீரோவுக்கு இரண்டு புறமும் இருப்பார்கள் அவர்கள் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டு கீழே விழுவார்கள் ஹீரோ எதுவும் செய்யாமல் சும்மா இருப்பார். இதை காட்சியாக விளக்கினால், “என்னப்பா கடைசி வரையும் நான் சும்மாதான் இருக்கிறேன்” என கேட்கிறார்கள் அந்த கேள்வியை தாண்டி என்னால் வரவே முடியவில்லை. இந்த ஒரு விஷயத்தை நான் கைவிட்டு இருந்தால் அந்த படம் எப்படியாவது நடந்திருக்கும். ஆனால் அந்த விஷயத்தை மாற்ற நான் தயாராக இல்லை. அப்படி நிறைய பேர் அந்த கதையை ஏற்றுக்கொள்ளவே இல்லை. அப்போது மீண்டும் விஜய் சேதுபதி அவர்களிடம் சென்றேன். அவர் அவருக்கென ஒரு கருணை கோட்டா வைத்திருப்பார். அவருக்கு கதை முழுவதும் பிடித்திருக்காது ஆனால் இருந்தாலும் இந்த இயக்குனருக்காக ஒரு படம் பண்ணுவோம், அவர் நீண்ட காலமாக காத்திருக்கிறார் என நினைத்து அவர் வருடத்திற்கு நான்கு படங்கள் அப்படி செய்து கொடுப்பார். அப்படி அந்த கருணை கோட்டாவில் போய் நானும் நின்றேன். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சென்றேன். “நீங்கள் தேதி கொடுங்கள், நிறைய படங்கள் ஹிட் ஆகும் என நினைத்து பண்ணுவீர்கள் ஃபிளாப் ஆகும் ஃபிளாப் ஆகும் என நினைத்து பண்ணுவீர்கள் ஹிட் ஆகும். இந்த படம் ஃபிளாப் என்று நினைத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை ஆனால் இந்த படத்தை நடித்துக் கொடுங்கள்” எனக் கேட்டேன். “நான் தேதி கொடுத்தால் படம் நடக்குமா” என்று கேட்டார். “ஆமாம் நடக்கும்” என்றேன். “சரி நான் நடிக்கிறேன்” என்றார்.” என விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு சிறப்பு பேட்டி இதோ…