தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தளபதி விஜய் தென்னிந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்கிறார். அந்த விதத்தில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கினை இரு மொழிகளில் தளபதி விஜய்க்கு கதாநாயகனாக நடித்த வாரிசு திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான ஃபேமிலி இன்டர்ஸ்டைனர் படமாக பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தனது திரைப்பயணத்தில் 67-வது திரைப்படமாக தளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் லியோ. நீண்ட காலமாக தளபதி 67 அப்டேட் என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்த, இந்த லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் கூட்டணியில் உருவாகும் ரியோ திரைப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றியும், LCUம் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த சில தினங்களில் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் ஆகியோருடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். கலை இயக்குனர் N.சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தளபதி விஜய் தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை துவங்கி இருக்கிறார். மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தளபதி விஜய் அனைத்து வயது மக்களும் விரும்பும் நடிகராக திகழ்கிறார். அந்த வகையில் ட்விட்டரில் 4.4 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்ட தளபதி விஜய் தற்போது இன்ஸ்டாகிராமில் நுழைந்திருப்பதால் ரசிகர்களும் பிரபலங்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது முதல் பதிவாக லியோ படத்தின் லுக்கில் இருக்கும் ஸ்டைலான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள, தளபதி விஜய், "ஹலோ நண்பாஸ் & நண்பீஸ்" என தனக்கே உரித்தான ஸ்டைலில் ரசிகர்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாகி வரும் தளபதி விஜயின் அந்த புகைப்படம் இதோ…