தன்னிகரற்ற மாஸ் ஹீரோவாக பல கோடி ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி விஜய் அடுத்ததாக மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 திரைப்படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் படப்பூஜை நடைபெற்றதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பும் நடைபெற்றது. இதுகுறித்த அதிரடியான அறிவிப்புகள் தளபதி விஜயின் வாரிசு பட ரிலீசுக்கு பின் வெளிவரவுள்ளன.

முன்னதாக முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிபல்லி இயக்கத்தில் தயாராகி இருக்கிறது வாரிசு (தெலுங்கில் வாரசுடு) திரைப்படம். தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்தில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைக்கிறார். ஏற்கனவே வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வைரல் ஹிட்டடிக்க, நேற்று ஜனவரி 4-ம் தேதி வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட வருகிற பொங்கல் வெளியீடாக ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் அஜித்குமாரின் துணிவு படமும் ரிலீஸாக இருப்பதால் இந்த பொங்கலை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.