தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய படமாக உருவாகி வரும் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’. சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன் லால், விநாயகன் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ‘ராக்கி’ புகழ் வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோரும் நடித்து வருகின்றனர். தற்போது பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் பிரபல நடிகை தமன்னா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரே வாரத்தில் தொடர்ந்து வரும் ஜெயிலர் அப்டேட்டினால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த அறிவிப்பை பரவலாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகை ஆவர். தமிழில் ‘கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். இடையில் சில காலம் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வறுகிறார். தமிழில் கடைசியாக விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் படத்தில் நடித்தார் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமன்னா சிரஞ்சீவி நடித்து வரும் ‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக்கான ‘போலா சங்கர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் அவரது நடிப்பில் இடைவெளி ஏற்பாட்டாலும் அன்று முதல் இன்று வரை தமன்னாவிற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. இந்நிலையில் தமன்னா ரஜினி படத்தில் நடிப்படையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். நிச்சயம் ஜெயிலர் திரைப்படம் இந்தியளவில் பேசும் பொருளாக அமையும் என்பதால் தமன்னாவின் மார்கெட் மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் ரஜினி படத்தில் தமன்னா இணைவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவராஜ் குமார், மோகன் லால், சுனில், தமன்னா என்று தொடர்ந்து இந்திய மொழி திரைப்படங்களில் உச்சம் பெற்ற நடிகர்கள் ஜெயிலர் படத்தில் இடம் பெறுவதால் நாளுக்கு நாள் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.