ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லரான ஜெயிலர் SHOWCASE இன்று ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதையின் நாயகனாக நடிக்க இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பக்கா மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக தயாராகி இருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு அதில் உள்ள பல விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிலிருந்து அட்டகாசமான 5 சிறப்பம்சங்களை பின்வருமாறு பார்க்கலாம்.

ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் மரண மாஸ் டிரான்ஸ்ஃபர்மேஷன்:


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆல் டைம் ஃபேவரட் படமான பாட்ஷா திரைப்படத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய காட்சிகளில் ஒன்று “மாணிக்கம் to பாட்ஷா” டிரான்ஸ்ஃபர்மேஷன் சீன். ஆட்டோ ஓட்டும் “மாணிக்கம்” - “மாணிக் பாட்ஷா”வாக மாறும் அந்த அதிரடியான மாஸ் சண்டை காட்சிக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் இந்த ஜெயிலர் திரைப்படத்தில் பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வயதான “முத்துவேல் பாண்டியன்” பழைய “டைகர் முத்துவேல் பாண்டியன்” ஆக மாறும் ஆக்சன் காட்சியில் திரையரங்குகள் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இயக்குனர் நெல்சனின் ஸ்பெஷல் டச்:


கோலமாவு கோகிலாவில் ஆரம்பித்து டாக்டர் மற்றும் பீஸ்ட் என தொடர்ச்சியாக தனக்கென தனி பாணியில் டார்க் காமெடி ஆக்சன் என்டர்டெய்னராக கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன் இந்த ஜெயிலர் திரைப்படத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான அதே சமயம் மிரட்டலான அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக ரசிகர்களுக்கு பக்கா ஆக்சன் ட்ரீட்டாக ஜெயிலில் இருக்கும் என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வழக்கமான அந்த ஸ்பீடை கொஞ்சம் குறைத்து தன்னுடைய முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் வடிவமைத்திருக்கும் இயக்குனர் நெல்சன் டைகர் முத்துவேல் பாண்டியன் ட்ரான்ஸ்ஃபர்மேஷனில் ஆக்ஷன் மட்டுமின்றி எக்கச்சக்கமான மாஸ் விஷயங்களை சர்ப்ரைஸாக வைத்திருக்கிறார்.

ராக்ஸ்டார் அனிருத்தின் தலைவர் FANBOY சம்பவம்:


தற்போதைய திரை உலகின் இன்றியமையாத இசையமைப்பாளராக திகழும் அனிருத் இந்த ஜெயிலர் திரைப்படத்திற்காக வேற லெவலில் இசையமைத்திருக்கிறார். முதல் முறை அறிவிப்பு ப்ரோமோவில் வந்த தீம் மியூசிக்கே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தொடர்ந்து முதல் பாடலாக வந்த காவாலா பாடல் ட்ரெண்டிங் ஹிட்டானது. இதனை அடுத்து வெளிவந்த ஹுக்கும் பாடல் அனிருத் ஒரு ரஜினி வெறியன் என்பதை காட்டும் வகையில் ரசிகர்களை கொண்டாட வைத்தது. பாடல்கள் மட்டுமல்லாது தனது BGMகளிலும் மாஸ் காட்டும் அனிருத் ஜெயிலர் திரைப்படத்தில் தலைவர் FANBOY சம்பவம் செய்திருப்பார் என்பது உறுதி என இந்த ட்ரெய்லரில் தெளிவாக தெரிகிறது.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கூடுதல் பலம் சேர்க்கும் நட்சத்திரங்கள்:


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்கு அதில் நடித்துள்ள நட்சத்திர பட்டாளம் மற்றொரு மிகப் பெரிய பலம். ஒருபுறம் சூப்பர் ஸ்டார் என்றால் மறுபுறம் யாரும் எதிர்பாராத வகையில் மரியான் படத்தில் வில்லனாக நடித்த முன்னணி மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக மிரட்ட இருக்கிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, புஷ்பா பட நடிகர் சுனில், விடிவி கணேஷ், சரவணன் மற்றும் மிர்னா மேனன் என பலரும் நடித்துள்ள ஷாட்டுகள் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக ரஜினிகாந்தின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் குறித்து பில்டப் கொடுக்கும் ஒரு ஷாட்டில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் தோன்றுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதுபோக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோரும் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர். ஆனால் அவர்களின் ஷாட்கள் ட்ரெய்லரில் இடம் பெறவில்லை. காவாலா பாடலில் அனைவரையும் ரசிக்க வைத்த தமன்னாவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி கம்பேக்:


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் இருவருக்கும் ஜெயிலர் கட்டாயமாக ஒரு அதிரடி கம்பேக் படமாக இருக்கும். இருவரது கடைசி திரைப்படங்களும் நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த நிலையில், அவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயிலர் திரைப்படத்தில் இருவரும் மாஸ் கம்பேக் கொடுப்பார்கள் என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது. நெல்சனின் அட்டகாசமான காட்சி அமைப்புகளும் ரஜினிகாந்தின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோரணையும் படத்தின் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து இப்போது வரை பெரும் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக ட்ரெய்லரில் கடைசியாக இடம் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பெரிய கேங்குடன் நடந்து வரும் ஷாட் பாட்ஷா படத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.