அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையிலான பிரம்மிப்பான படைப்புகளை கொடுத்து இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களின் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்தவர் இயக்குனர் SS.ராஜமௌலி. குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ , பாகுபலி 1&2 ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் SS.ராஜமௌலி தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பாக இயக்கிய RRR திரைப்படம் உலக அளவில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்தது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த RRR திரைப்படம் உலக அளவில் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. தொடர்ந்து சமீபத்தில் ஜப்பானில் ரிலீசான RRR திரைப்படம் அங்கும் வசூல் சாதனையை படைத்தது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள RRR படத்தை DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ளார். மேலும் விமர்சன ரீதியாகவும் பல்வேறு பாராட்டுகளையும் விருதுகளையும் வாங்கி குவித்து வரும் RRR திரைப்படத்திற்காக நியூயார்க் ஃபிலிம் க்ரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் சிறந்த இயக்குனருக்கான விருதை SS.ராஜமௌலி வென்றார்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு RRR படத்தின் சூப்பர் ஹிட் பாடலான நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் MM.கீரவாணி அவர்கள் கோல்டன் குளோப் விருது வென்றார். இந்நிலையில் கோல்டன் குளோப் விருதை தொடர்ந்து ஆஸ்கார் விருதுகளுக்கான போட்டியிலும் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற மார்ச் 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் 95வது ஆஸ்கார் விருது விழாவில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வெல்லுமா என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…