காலம் கடந்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்து இன்றும் தரமான தமிழ் திரைப்படங்கள் பட்டியலில் இருக்கும் திரைப்படம் சசிகுமாரின் சுப்ரமணியபுரம். கடந்த 2008 ல் புத்தம் புது குழுவுடன் எந்தவொரு ஆர்பாட்டமுமின்றி தமிழ் சினிமாவில் களமிறங்கிய சுப்ரமணியபுரம் தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்திய அளவில் அதிகம் பேசபட்டது. இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் மதுரை மக்களின் வாழ்வியலையும் அதனுள் நடக்கும் குற்றங்களின் பின்னணியையும் பீரியட் கதையில் பேசியிருக்கும் சுப்பிரமணியம் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. முதல் படத்திலே அழுத்தமான கதை, மறக்க முடியாத கதாபாத்திரங்கள் என்று படத்தின் சுவாரஸ்யத்தை செதுக்கியிருப்பார் சசிக்குமார். இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுவாதி நடித்திருப்பார் மேலும் இவர்களுடன் இயக்குனர் சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சசிகுமாரின் சொந்த தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் படத்திற்கு இசையமைத்திருப்பார். இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலம் என்பது குறிப்பிடதக்கது.

ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் வெற்றி படமாக அமைந்த சுப்ரமணியபுரம் திரைப்படம் இன்றும் ரசிகர்களாலும் திரை பிரபலங்களாலும் குறிப்பிட்டு பேசக்கூடிய படமாக இருந்து வருகிறது. இன்றுடன் இப்படம் 15 ஆண்டினை நிறைவு செய்கிறது. இது தொடர்பாக ரசிகர்கள் ‘15 Years of Subramaniapuram’ என்ற ஹெஷ்டேக்குகளை பதிவிட்டு படம் குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் தற்போது 15 ஆண்டு சுப்ரமணியபுரம் குறித்து பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

"15 வருஷம் போனதே தெரில.. இப்போதான் ஆரம்பிச்சா மாதிரி இருக்கு.. ரொம்ப சந்தோஷமா‌ இருக்கு ஒரு படம் வெளியாக 15 வருஷம் ஆகியும் அது மக்கள் மனதில் இடம் பிடித்து இன்னும் பேசப்பட்டு கொண்டிருப்பது மக்களினால் தான். அவர்களுக்கு நன்றி. படம் வந்தப்போ படத்தை தோள் ல வெச்சு கொண்டாடல.. அதை தலையில் ஏற்றி வெச்சு கொண்டாடுனாங்க.. அதை எப்பவும் மறக்க மாட்டேன்.

நான் இத்தனை வருஷம் திரைத்துறையில் இருக்க சுப்பிரமணியம் முக்கிய காரணமா இருக்கு. அதனால் மக்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பத்திரிகை துறையினர் என் முதல் படம் முதல் இன்று வரை உறுதுணையா இருந்திருக்காங்க.. அவங்களுக்கு என் நன்றி.. மற்றும் நண்பர்கள், நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்.” என்றார்.

அதை தொடர்ந்து இயக்குனரும் சுப்ரமணியபுர நடிகருமான சமுத்திரகனி வெளியிட்டுள்ள வீடியோவில், 15 வருஷத்துல இந்த சினிமாவில் கத்துக்கிட்டன் னு சொல்வதை விட அனுபவிச்சிருக்கேன். அதை கடந்து வந்துருக்கேன். அப்படி அதையெல்லாம் கடந்து வரவெச்சதுக்கு காரணமாக இருந்தது சுப்ரமணியபுரம். அதை தொடர்ந்து சுப்பிரமணியபுரம் 15 வருஷம் ஆயிடுச்சு. ரொம்ப வியப்பாக இருக்கு.. என்னை நடிகனாக உங்கள் முன்பு நிறுத்திய திரைப்படம். படத்தில் பணியாற்றி நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முகவரி கொடுத்த திரைப்படம்‌.

இத்தனை ஆண்டு கழித்தும் சுப்ரமணியபுரம் ஒரு துளி வீரியம் குறையாமல் உங்கள் முன்னால் பயணப்பட்டு கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது‌. தம்பி சசி அடுத்த ஒரு படைப்பிற்காக தயாராகி கொண்டு இருக்கிறார்‌ அந்த படைப்பு சுப்பிரமணியபுரத்தை விட ஒரு பலமான படைப்பாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

தற்போது இது தொடர்பாக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.