நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் மிக முக்கிய படமாக தற்போது வெளிவந்திருக்கும் மாவீரன் திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்து வெற்றி பெற்று இருக்கும் நிலையில், சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தனது எமோஷனலான அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறார். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட கடந்த ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் மாவீரன் படம் ரிலீஸானது. சிவகார்த்திகேயனின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத வித்தியாசமான படமாக வெளிவந்திருக்கும் இந்த மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நான்கு நாட்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாவீரன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மாவீரன் திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஷ்வா அவர்கள் மாவீரன் திரைப்படத்தின் வெற்றியை குறிப்பிட்டு எமோஷனலான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், “நான் சாந்தி டாக்கிஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய போது ஒரு பெரிய பொருள் செலவில் ஒரு பெரிய நட்சத்திரத்தோடு முதல் படத்தை தயாரிப்பேன் என கனவு கண்டது கூட இல்லை. இந்த ஜூலை 14, 2023 அன்று அந்த பெரிய நாள் வந்தது. தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து நடந்த எல்லா விஷயங்களும் நம்ப முடியாததாகவே இருக்கிறது. நம்முடைய சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அளவற்ற அன்பும் ஆதரவும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாமே ஒரு மனிதரால் தான்... அவர் எங்களுக்கான வலிமையையும் நம்பிக்கையையும் கொடுத்து அவர்தான் மாவீரன் என எங்களை உணர வைத்தார். அவர் என்னை நம்பினார்… மடோன் அஸ்வின் அவருடைய குழு மற்றும் அவருடைய பார்வை எல்லாவற்றையும் நம்பினார். அந்த நம்பிக்கை தான் எங்களை இன்று இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. எனது வாழ்க்கையில் இப்படி ஒரு நண்பர் கிடைத்ததற்காக நான் மிகுந்த பெருமையும் நன்றி கடனும் பட்டிருக்கிறேன். உங்களை இன்ஸ்பயர் செய்யும் வகையில் இருக்கும் ஒரு நண்பரை விட வேறு என்ன உங்களுக்கு வேண்டும். நன்றி எனது அன்பு சிவகார்த்திகேயன் அவர்களே… உங்களுடைய நம்பிக்கைக்கு நன்றி… உண்மையான மாவீரனாக இருந்ததற்கு நன்றி..” குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஷ்வாவின் அந்த பதிவு இதோ…