தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வளம் வந்த நடிகர் ஜூனியர் பாலையா திடீரென காலமானார் அவருக்கு வயது 70. தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான T.S.பாலையா அவர்களின் மகனான ஜூனியர் பாலையா அவர்களின் இயற்பெயர் ரகு. கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் AP.நாகராஜன் இயக்கத்தில் நடிகர் சிவகுமார் கதாநாயகனாக நடித்த மேல்நாட்டு மருமகள் திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கிய நடிகர் ஜூனியர் பாலையா தொடர்ந்து தியாகம், எமனுக்கு எமன், வாழ்வே மாயம் என அடுத்தடுத்து குறிப்பிடப்படும் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். குறிப்பாக தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக கொண்டாடப்பட்ட கரகாட்டக்காரன் திரைப்படத்திற்கு பிறகு வரிசையாக கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், அமராவதி, பவித்ரா, அவதாரம், மாயா பஜார், இரட்டை ரோஜா, சேரன் சோழன் பாண்டியன், ஜூலி கணபதி, ஜெயம், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த ஜூனியர் பாலையா அவர்கள் இந்த தலைமுறை ரசிகர்களுக்கு பரிச்சயமான படங்கள் என்றால் விக்ரம் பிரபுவின் கும்கி, சமுத்திரகனியின் சாட்டை மற்றும் அஜித்குமாரின் மேற்பட்ட பார்வை. குறிப்பாக சமுத்திரக்கனியின் சாட்டை திரைப்படத்தில் தலைமை ஆசிரியர் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா உடனான பல காட்சிகளில் மிக சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தனி ஒருவன், புலி, மாறா உள்ளிட்ட படங்களில் நடித்த ஜூனியர் பாலையா கடைசியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த என்னங்க சார் உங்க சட்டம் படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல மெகா தொடர்களில் நடித்த ஜூனியர் பாலையா அவர்கள் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் சூப்பர் ஹிட் தொடர்களான சித்தி, வாழ்க்கை மற்றும் சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட தொடர்களில் நடித்திருக்கிறார்.

சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நடிகர் ஜூனியர் பாலையா இன்று நவம்பர் 2ம் தேதி காலை திடீரென மூச்சுத் திணறல் காரணமாக மிகுந்த அவதிக்கு உள்ளாகி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பழம்பெரும் நடிகர் T.S.பாலையா அவர்களின் மகனும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவருமான ஜூனியர் பாலையா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஜூனியர் பாலையா அவர்களின் உடல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நாளை நவம்பர் 3ம் தேதி இறுதி சடங்குகள் நடைபெற இருப்பதாக தெரிகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான நடிகராக வலம் வந்த ஜூனியர் பாலையா அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.