தங்கலான் திரைப்படத்திற்காக நடிகர் சியான் விக்ரம் கொடுத்திருக்கும் அவரது அர்ப்பணிப்பு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசியிருக்கிறார். ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கிய படங்களில் ஒன்றாக தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தின் டீசர் இன்று நவம்பர் 1ம் தேதி வெளிவந்து அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இதற்காக தங்கலான் டீசர் வெளியீட்டு விழா ஒன்றையும் படக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் நடிகர் சீயான் விக்ரமின் நடிப்பு குறித்தும் அவரது அர்ப்பணிப்பு குறித்தும் பல முக்கிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக தங்கலான் திரைப்படம் உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. முன்னதாக இந்த தங்களான் திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது

“விக்ரம் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னுடைய கல்லூரி காலகட்டங்களில் இருந்து அவருடைய திரைப்படங்களில் ஒரு நடிகராக அவரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் கலைத்துவமான ஒரு நடிகர். மற்ற கமர்சியல் நடிகர்கள் மாதிரி விக்ரம் சாரை சில படங்களில் பார்க்க முடியாது. அவர் கமர்சியலாக பல படங்கள் செய்திருக்கிறார் செய்து வெற்றியும் அடைந்திருக்கிறார். ஆனால் ஒரு நடிகராக எனக்கு அவர் மீது ஒரு பெரிய மதிப்பு இருக்கிறது. அதனால்தான் அவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் மிகவும் ஆவலோடு காத்திருந்தேன். சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு அவரோடு இணைந்து பணியாற்ற போகிறேன் என்றால் அது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்ற போது, இப்படி ஒரு பீரியட் டிராமாவிற்குள் போகலாம் இதை விக்ரம் சார் பயங்கரமாக பண்ணி விடுவார். நடிப்பில் அடுத்த லெவலுக்கு போய் விடுவார் என்று எனக்கு தோன்றியது. பொதுவாக நாங்கள் படம் பண்ணுவதற்கு முன்பு கேரக்டர் ஸ்கெட்ச் செய்வோம். ஒரு ஓவியம் வரைந்து இப்படி தான் இருக்க வேண்டும் நடிகர்கள் என்று பார்ப்போம். அப்படி செய்து சில போட்டோக்கள் மட்டும் தான் எடுத்து அவரிடம் நான் கொடுத்தேன் அவரிடம். ஆனால், அவர் அந்த மாதிரியான ஒரு ஆளாகவே மாறி ஸ்பாட்டுக்கு வந்து விட்டார். பொதுவாக நான் கொஞ்சம் ஸ்கெட்ச் செய்து சில விஷயங்களை கரெக்ட் செய்து மாற்றுவேன். நான் நிறைய எஃபர்ட்ஸ் போடுவேன் நடிகர்களிடம், ஆனால் முதல் முறையாக அவர் எனக்கு நிறைய சாய்ஸ் கொடுத்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் மெனக்கெடுவது வந்து ஒரு நடிகராக அந்த கேரக்டருக்கு செய்யும் நியாயமாக நான் பார்க்கிறேன். நான் அதை ஒரு கடின உழைப்பாக கூட பார்க்கவில்லை. ஏனென்றால் எல்லோருமே கஷ்டப்பட்டு தான் உழைக்கிறார்கள். கஷ்டப்படாதவர்கள் யாருமே இல்லை. எல்லோருமே கஷ்டப்படுகிறோம் கஷ்டப்பட்டு தான் உழைக்கிறோம். அந்தக் கஷ்டத்தை அப்படி சொல்ல வேண்டும் என்று நான் விருப்பப்படவில்லை.”

என தெரிவித்து இருக்கிறார். தங்கலான் திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவின் முழு வீடியோ இதோ…