இந்திய திரை உலகின் மெல்லிசை ராணியாக திகழ்ந்த கானக்குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் காலமானார். தமிழ், ஹிந்தி, பெங்காலி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒடியா, குஜராத்தி, பஞ்சாபி, நேபாளி, உருது, ஆங்கிலம், மராத்தி, துளு என கிட்டத்தட்ட 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடிய லதா மங்கேஷ்கர் இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா , இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே உட்பட 3 தேசிய விருதுகள் மற்றும் 7 ஃபிலிம் ஃபேர் விருதுகளை பெற்றவர்.

1945-ம் ஆண்டு படி மா திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான பாடகி லதா மங்கேஷ்கர் கடைசியாக பாலிவுட்டில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயில் திரைப்படம் வரை கிட்டத்தட்ட 64 ஆண்டுகள் தனது தேன் குரலால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார். குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சத்யா படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த இடம்பெற்ற “வளையோசை” பாடலில் தனது கொஞ்சும் குரலால் ரசிகர்களை மயக்கியவர் லதா மங்கேஷ்கர். மேலும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த தில் சே (தமிழில் உயிரே) திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய “ஜியா ஜலே” எனும் பாடல் மொழிகளைக் கடந்து தென்னிந்திய மொழி ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை நேற்று( பிப்ரவரி 5) மிகவும் மோசமானதாக மருத்துவமனை தரப்பு அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து இன்று(பிப்ரவரி 6) கானக் குயில் லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மறைந்த லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு வயது 92. அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இந்திய திரை உலகின் மெல்லிசை ராணியாக விளங்கிய லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு இசை உலகின் பேரிழப்பு. பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்திய திரையுலகமும், பிரபலங்களும், கோடான கோடி ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Legendary singer #LataMangeshkar (92), the Nightingale of India, passed away earlier this morning, Feb 6.

An irreplaceable loss for the Indian music industry and the people across the world! 💔

Let her soul rest in peace! pic.twitter.com/JeszWisxms

— Galatta Media (@galattadotcom) February 6, 2022