தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோரது அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடர்ச்சியாக 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்று நிறைவுடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 2023 ஆம் ஆண்டு ஆயுத பூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகர் சூர்யாவின் திரைப் பயணத்திலேயே பிரம்மாண்ட திரைப்படமாக இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. பிரம்மிபூட்டும் வகையில் 3டி தொழில்நுட்பத்தில் பக்கா பீரியட் ஆக்சன் படமாக உருவாகும் கங்குவா திரைப்படத்தை 10 மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் வியாபாரம் மற்றும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் வியாபாரம் இவை இரண்டையும் ஒப்பிட்டு வருகிறார்களே? என கேட்டபோது,

"அது அவசியம் இல்லை அந்தந்த படங்களுக்கு அந்தந்த படங்களுடைய பலம்… இதில் ஒப்பீடு தேவையில்லை. நாம் என்ன முதலீடு செய்கிறோம் நமக்கு என்ன லாபம் வருகிறது, மக்களை எந்த அளவிற்கு நாம் திருப்தி படுத்துகிறோம் என்பது தான் கடைசியில் முக்கியம். அப்படி பார்க்கையில் ஒவ்வொரு திரைப்படங்களுக்குமே அந்தந்த திரைப்படங்களுக்கான சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. கண்டிப்பாக ரசிகர்களும் அதை ரசிப்பார்கள் கொண்டாடுவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை…" என பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து அவரிடம், "ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படத்தோடு கங்குவா திரைப்படமும் போட்டி போடுவதாக ஒரு பேச்சு நிலவுகிறது இதை எப்படி பார்க்கிறீர்கள்?" என கேட்ட போது, "போட்டி எல்லாம் இல்லை... நாங்கள் அறிவித்து விட்டோமே அடுத்த (2024)ஆண்டு தான் என்று... இந்த ஆண்டு கங்குவா வரவில்லை. ஏனென்றால் வேலைகள் இன்னும் நிறைய இருக்கிறது. அதனால் இந்த ஆண்டு கங்குவா வரவில்லை. லியோ ஆயுத பூஜைக்கு வருகிறார்கள்." என தெரிவித்துள்ளார். இன்னும் சில சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்களின் முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.