இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் அவர்களால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடல் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் கௌதம் கார்த்திக், அடுத்தடுத்து நடித்த ரங்கூன் மற்றும் இவன் தந்திரன் ஆகிய திரைப்படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து ஹர ஹர மகாதேவகி, இந்திரஜித், ஆகிய திரைப்படங்களில் நடித்த, கௌதம் கார்த்திக் தனது அடுத்த படமான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்தார்.

இதனைத் தொடர்ந்து அடல்ட் ஹாரர் காமெடி திரைப்படமாக இயக்குனர் சந்தோஷ் P ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த Mr.சந்திரமௌலி, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற தவறின. கடைசியாக கடந்த 2022ம் ஆண்டில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் யுத்த சத்தம். கௌதம் கார்த்திக் மற்றும் பார்த்திபன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் எழில் இயக்கத்தில் அவது வழக்கமான திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக யுத்த சத்தம் திரைப்படம் உருவானது.

இதனிடையே இயக்குனர் ஒபேலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன்.TR மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி திரைப்படத்தின் ரீமேக்காக தயாராகி இருக்கும் பத்து தல திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் 16 ஆகஸ்ட் 1947. இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ஏ.ஆர்.முருகதாஸ் ப்ரொடக்சன் சார்பில் தயாரித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்தை பர்பிள் புள் என்டர்டைன்மென்ட் மற்றும் காட் பிளஸ் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.

கௌதம் கார்த்திக் உடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரேவதி ஷர்மா ரிச்சர்ட் அஸ்தன் ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்திற்கு செல்வகுமார். SK ஒளிப்பதிவில், சுதர்சன்.R படத்தொகுப்பு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்தின் முதல் பாடலாக கோட்டிக்கார பயலே எனும் பாடல் தற்போது வெளியானது. கலக்கலான கோட்டிக்கார பயலே பாடலின் லிரிக்ஸ் வீடியோ இதோ…