நாளுக்கு நாள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகளை படம் பிடிப்பதற்கான ஸ்பெஷல் கேமரா இந்தியாவில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணி இணைந்து இருப்பதாலும், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றதாலும் லியோ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இதுவரை லியோ படம் சார்ந்து வெளிவரும் ஒவ்வொரு தகவல்களும் இந்த எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகரிக்க செய்துள்ளன.இதுபோக தனது விக்ரம் மற்றும் கைதி ஆகிய திரைப்படங்களில் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் LCU யுனிவர்ஸ் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. இந்த யுனிவர்ஸில் தளபதி விஜயின் லியோ படமும் இடம்பெருமா என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா லியோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். லியோ திரைப்படம் தளபதி விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் அவர்களது திரைப் பயணத்தில் 67 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் லியோ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக தளபதி விஜயின் பிறந்தநாளான வரும் ஜூன் 22 ஆம் தேதி லியோ திரைப்படத்தின் முதல் பாடலான "நா ரெடி" பாடல் ரிலீஸாகவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்ச்சியாக 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்த கட்டமாக தற்போது சென்னையில் லியோ பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதனிடையே லியோ திரைப்படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகளை படம் பிடிக்கும் சிறப்பு RED KOMODO X ரக கேமராவை லியோ படக்குழுவினர் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த சில பிரம்மாண்ட ஹாலிவுட் ஆக்சன் படங்களில் மிக வேகமான சண்டை காட்சிகளை படமாக்க பயன்படுத்தப்பட்ட இந்த கேமரா இந்திய சினிமாவில் முதல் முறையாக லியோ படத்தில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த கேமராவை அறிமுகப்படுத்த அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும் இணைந்திருக்கும் புதிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.