இந்திய திரையுலகில் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு என பல மொழி ரசிகர்களையும் தன் நடிப்பினால் கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். முன்னதாக கடந்த 2022 ல் மட்டும் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் ஹே சினாமிக்கா, மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதா ராமம், இந்தியில் சுப் என இந்திய சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்தார். அதை தொடர்ந்து தற்போது துல்கர் சல்மான் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அதன்படி பேமிலி மேன் – பர்சி போன்ற வெற்றி தொடர்களை இயக்கிய இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள கன்ஸ் அன்ட் குலாப்ஸ் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இந்தியில் தயாராகியுள்ள கன்ஸ் அன்ட் குலாப் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நெட்பிலிக்ஸ் – ல் வெளியாகவுள்ளது. இதையடுத்து துல்கர் சல்மான் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகும் ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்

இதனிடையே துல்கர் சல்மான் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் 1980 களில் நடைபெறும் கேங்ஸ்டர் கதைகளத்தில் உருவாகும் இப்படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து கோகுல் சுரேஷ், செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, ஷம்மி திலகன், அணிகா சுரேந்தரன், நைலா ஷர்மா மற்றும் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் கல்லரக்கால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தின் கதாநயாகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகை ரித்திகா சிங் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

ஜி ஸ்டுடியோஸ் உடன் இணைந்து துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் ஷியாம் சசிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்தின் பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் உடன் இணைந்து ஷான் ரஹ்மான் இசையமைக்க பின்னணி இசை அமைத்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய்.

மிரட்டலான கேங்ஸ்டர் திரைப்படமாக அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படம் வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 24ம் தேதி உலகமெங்கும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி நடிகர்கள் மோகன் லால், சூர்யா ஆகியோர் வெளியிடவிருந்தனர். இந்நிலையில் கிங் ஆஃப் கோதா பட டிரைலர் அறிவிதத்தன் படி இன்று வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல மலையாள இயக்குனரும் தளபதி விஜயின் ஹிட் திரைப்படங்களான பிரண்ட்ஸ், காவலன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சித்திக் உடல்நலக் குறைவினார்ல் நேற்று இரவு காலமானார். இவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சோக நிகழ்வில் பங்கெடுக்கும் விதமாக கிங் ஆஃப் கோதா படக்குழுவினர் டிரைலர் வெளியிடவில்லை என்று தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்களால் படக்குழுவினரின் அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.