தமிழ் சினிமாவில் எதார்த்தமான திரைப்படங்கள் மூலம் அழுத்தமான கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. தொடர்ந்து தரமான நேர்த்தியான படங்களை கொடுத்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகளவில் பேசப்பட்டு வருகிறார் இயக்குனர் சீனு ராமசாமி. அவரது முந்தைய படங்களான ‘தென்மேற்கு பருவகாற்று’, ‘நீர்பறவை’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் திரையுலகில் மிக முக்கிய படங்களாக இருந்து வருகின்றது. இதில் விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது. முன்னதாக மக்கள் செல்வன் விஜய் செதுபதி கூட்டணியில் மாமனிதன் திரைப்படம் தற்போது ஒரு ஆண்டு கால நிறைவு பெற்று ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வருகிறது. மாமனிதன் திரைப்படம் வசூல் அடிப்படையில் வரவேற்பு இல்லையென்றாலும் உலக மேடைகளில் விருதுகளால் இப்படம் அலங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. தற்போது இயக்குனர் சீனு ராமசாமி ஜிவி பிரகாஷ் குமார் கூட்டணியில் ‘இடி முழக்கம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இடி முழக்கம் படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வைரலாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிகம் ஈடுபாடுடன் சமூக கருத்துகளையும் திரைப்படங்கள் குறித்த கருத்துகளையும் பகிர்ந்து வரும் இயக்குனர் சீனு ராமசாமி தற்போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு ட்விட்டர் பதிவு மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் பதிவிட்ட பதிவில், தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள் சினிமா, தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை தடை விதித்தல் செய்திட முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து ரசிகர்களிடம் இந்த பதிவு வரவேற்பு பெற்று தற்போது வைரலாகி வருகிறது. சமீப காலமாக தேவர் மகன் திரைப்படம் குறித்த சர்ச்சை இணையத்தில் ரசிகர்களால் விவாத பொருளாக மாறியதையடுத்து இயக்குனர் சீனு ராமசாமி பதிவும் தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.