தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் பல தசாப்தங்களாக இயங்கி வந்த நடிகர் ராசு உடல் நலக்குறைவினால் காலமானார். 70 வயதுடைய இவர் சில மாதங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் அவர் உடல் நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிகழ்வு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவிற்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

கார்த்தி நடிப்பில் இன்று வரை மைல் கல்லாக இருந்து வரும் திரைப்படம் ‘பருத்தி வீரன்’ இந்த திரைப்படம் இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கதாநயகன் கார்த்திக்கு மட்டும் அல்லாமல் இப்படத்தில் நடித்த சரவணன், பொன் வண்ணன், பிரியா மணி, கஞ்சா கருப்பு, சுஜாதா உள்ளிட்ட பல நடிகருக்கும் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த நடிகர்களின் வரிசையில் மறைந்த ராசு அவருக்கும் இந்த திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. பொணந்தின்னி என்று பேசப்பட்ட கதாபாத்திரம் இவரது நடிப்பும் குரலும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இளமையில் தீவிர எம் ஜி ஆர் ரசிகராய் இருந்த போது எம் ஜி ஆர் அவர்களை விமர்சித்து பேசுபவர்களை திட்டி திட்டியே இவரது குரல் மாறியது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட குறிப்பிட்டு பேசியிருப்பார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை எளிதில் கவர்ந்து மிக பரிச்சியமான முகமாக மாறி மக்களின் கலைஞராய் பார்க்கப் பட்ட நடிகர் ராசு. முதல் முதலில் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்கு சீமையிலே’ திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றார். பின் பல படங்களில் நடித்த இவருக்கு பருத்தி வீரன் திருப்புமுனையாக அமைய அதை தொடர்ந்து மைனா, கந்தசாமி, வேலாயுதம் என்று பல படங்களில் நடித்துள்ளார். இதில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் திரைப்படம் அவருக்கு 100 வது திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது. இதுவரை 140 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ராசு மறைவு ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது. தனித்துவமான அவரது குரலும் நடிப்பும் இன்று வரை பல படங்களின் காட்சிகளில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். அவரது மறைவிற்கு கலாட்டா தமிழ் இரங்கல்களை தெரிவித்து கொள்கிறது.